வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அடுத்த சில ஆண்டுகளில் 56 புதிய விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கும் - அமைச்சர் சுரேஷ் பிரபு உலகளாவிய போக்குவரத்து உச்சிமாநாட்டில் உரை.

Posted On: 05 APR 2018 1:23PM by PIB Chennai

இந்தியா போன்ற நாடுகளில் திறம்பட்ட சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து மிகவும் முக்கியமானது. உள்நாட்டு மற்றும் உலக பொருளாதாரத்துடன் விரைவான மற்றும் விரிவான ஒருங்கிணைப்புக்கும் வர்த்தகத்தை பயன்படுத்துவதற்கும் இது முக்கியமானது. இதை மனதில் கொண்டு அடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் 56 புதிய விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்று மத்திய வர்த்தக தொழில் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு கூறியிருக்கிறார். புதுதில்லியில் நடைபெறும் இரண்டு நாள் உலக மக்கள் மற்றும் பொருள் போக்குவரத்து உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

தொடர்புடைய அனைவரையும் இணைத்துக் கொண்டு இது போக்குவரத்தையும் இணைப்புகளையும் மேம்படுத்தும் சரியான அமைப்பை உருவாக்குமென்று அமைச்சர் கூறினார். போக்குவரத்தும் இணைப்புகளும் மாநிலங்களுக்கு உள்ளேயும் சர்வதேச அளவிலும் வர்த்தகம் நடைபெற முக்கியமானவை என்றார் அவர்.

இந்தியாவின் மக்கள் மற்றும் பொருள் போக்குவரத்து தொழில் 2019-20ல் சுமார் 21500 கோடி அமெரிக்க டாலராக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்துறை ஆண்டுக்கு 10 சதவீத வேகத்தில் வளாச்சி அடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே, சாலை, நெடுஞ்சாலை, உள்நாட்டு நீர்வழிப்பாதைகள், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து ஆகியவற்றில் முக்கியமான மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் (உலக வங்கி தயாரிப்பது) இந்தியா தனது தர நிலையை 2014ல் 54 என்ற நிலையிலிருந்து 2016ல் 35 என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தை தொடர வேண்டுமானால் போக்குவரத்து அடிப்படை வசதிகள், சேவைகள், பல்வேறு வகை போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான அணுகுமுறையை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நல்ல புரிந்துணர்வு உருவாவதையும் ஆதரிக்க மத்திய வர்த்தக தொழில்துறை ஃபிக்கி, உலக வங்கிக் குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்த உச்சி மாநாட்டை இன்றும் நாளையும் (05.04.2018 மற்றும் 06.04.2018) நடத்துகின்றன.

மேற்குறித்த பிரச்னைகளை உலக நிபுணர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், தனியார் துறையினர், தொழல்துறை பிரதிநிதிகள் ஆகியோருடன் விவாதிக்க இந்த உச்சி மாநாடு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


(Release ID: 1528000)
Read this release in: English , Hindi , Marathi