வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏற்றுமதியை எளிமைப்படுத்துவதற்கான டிஜிட்டல் முன்முயற்சிகளை சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்

Posted On: 03 APR 2018 5:47PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்றுமதியை எளிமைப்படுத்துவதற்காக ஏற்றுமதி ஆய்வுக்குழு மேற்கொண்டுள்ள  டிஜிட்டல் முன்முயற்சிகளை மத்திய வர்த்தகம், தொழில் துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த டிஜிட்டல் முன்முயற்சிகள் காரணமாக இந்தியாவின் வேளாண் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், புதிய உத்வேகம் பெறும் என்றார்.

உலகின் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின்  ஏற்றுமதி சான்றளிப்பு அமைப்பான ஏற்றுமதி ஆய்வுக் குழு இந்த முன்னோடித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

நம்பகமான ஆய்வு மற்றும் சான்றளிப்பு நடவடிக்கைகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை தொடரவும், இந்திய உற்பத்திப் பொருட்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யவும், மூன்று தகவுகள் உருவாக்கப்பட்டு, பரிமாற்ற நேரம் குறைப்பு மற்றும் வெளிப்படையான செலவின முறைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவுகள்,  ஏற்றுமதியை எளிதாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கியதோடு மட்டுமின்றி காகித பயன்பாட்டை குறைக்கவும் லட்சக்கணக்கான மரங்களை அழிவிலிருந்து காக்கவும் அரசின் பசுமை முயற்சிகளிலும் இந்த தகவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வெளிநாட்டு திறன் ஆய்வு நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் திறன் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, ஏற்றுமதி ஆய்வுக்குழு நாட்டின் ஆய்வுத் திறமையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மத்திய இணையமைச்சர் திரு. சி. ஆர். சவுத்திரி, வர்த்தகத் துறை செயலாளர் ரீட்டா டியோடியா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர். 

கூடுதல் விவரங்களுக்கு http://pib.nic.in/ என்ற இணையதளத்தை காணவும்.



(Release ID: 1527518) Visitor Counter : 146


Read this release in: English , Marathi