மத்திய அமைச்சரவை

அமெரிக்காவில் டிசிஐஎல் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2018 8:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று (மார்ச் 21) தில்லியில் நடைபெற்றது. அந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமெரிக்காவில் இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின் (TCIL) 100 சதவீதம் பங்கு உரிமை கொண்ட சி கார்ப்பரேஷன் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

  1. இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் சி கார்ப்பரேஷனை அமெரிக்கா, டெக்ஸஸ் மாகாணத்தில் அமைப்பது, அதன் வணிகத்தை அமெரிக்காவின் இதர மாகாணங்களிலும் மேற்கொள்வதற்குப் பதிவு பெறுவதற்கு அனுமதிப்பு
  2. உருவாக்கப்படும் சி கார்ப்பரேஷனில்  இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின் (டி சி ஐ எல்) 100 சதவீத பங்குகளும் மொத்தம் 50 லட்சம்  அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33.84 கோடி) மதிப்புக்கு படிப்படியாக முதலீடு செய்வது.
  3. இத்திட்டங்களை அமெரிக்காவில் நிறைவேற்றுவதற்கு இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின்  50 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 33.84 கோடி) எதிர் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். கடன் வழங்கும் நிறுவனங்கள், வசதிகளுக்கு, விற்பனையாளர்களுக்கு ஏலக் கடன் பத்திரங்களின் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.

 

உருவாக்கப்படும் “சி கார்ப்பரேஷன்” நாட்டுக்கு அதிக மதிப்பிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும். அரசுத் துறை நிறுவனமான டிசிஐஎல் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும்.

அமெரிக்கா, டெக்ஸஸ் மாகாணத்தில் பல்வேறு தொழில் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் “சி கார்ப்பரேஷன்” அமைக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட “சி கார்ப்பரேஷன்” தொடங்கிய சில ஆண்டுகளில் ஒரு கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு விற்றுமுதலுடன் 10 சதவீத லாபத்தை ஈட்டும். இது பணிகளின் அளவுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கும்.

டிசிஐஎல்  நிறுவனம் தனது வணிகத்தை விருத்தி செய்யவும் விற்றுமுதல், லாபம் ஆகியவற்றை அதிகரிக்கவும் அமெரிக்காவில் உள்ள “சி கார்ப்பரேஷன்” துணை புரியும். அதன் விளைவாக அரசுக்கு கூடுதலான லாபப்பங்கு (டிவிடெண்டு) கிடைக்க வழியேற்படும்.

இதற்கான மொத்த முதலீடான 50 லட்சம்  அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 33.84 கோடி) இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் பங்குத் தொகையாக அளிக்கும். டிசிஐஎல் நிறுவனம் தனது வணிக விரிவாக்கத்துக்காக அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக அதே அளவான 50 லட்சம் அமெரிக்க டாலருக்கு எதிர் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். அத்துடன், ஏலமிடும் பத்திரங்கள், முன்கூட்டியே செலுத்தும் உத்தரவாதத் தொகை, அரசுக்கு அளிக்கும் வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவற்றை “சி கார்ப்பரேஷன்” சார்பில் அளிக்க வேண்டும். இது விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் நிதி தொடர்பாக எந்த நடவடிக்கையும் இருக்காது.

பின்னணி:

டிசிஐஎல் நிறுவனம் ஐஎஸ்ஓ-9001:2008 மற்றும் ஐஎஸ்ஓ 14001:2004 (ISO - 9001: 2008 and ISO 14001:2004) சான்றிதழ்களைப் பெற்ற முன்னணி நிறுவனமாகும். ஷெட்யூல் – ஏ பிரிவில்  இடம்பெறுகிறது. மினி ரத்னா பிரிவு-1  என்ற சிறப்பு பெற்றது. 100 சதவீதம் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். உலகில் 70 நாடுகளுக்கு மேல் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. ஆலோசனை மற்றும் ஆயத்த தயாரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிவில் கட்டுமானத் திட்டங்களில் கருத்துரு அளிப்பது முதல் திட்ட நிறைவேற்றம்  வரையிலான அனைத்துச் சேவைகளையும வழங்கி வருகிறது.

இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனத்தின்  நிகர மதிப்பு ரூ. 2433.66 கோடியாகும். தனித்த மதிப்பு மட்டும் ரூ. 588.92 கோடி. இந்நிறுவனம் லாபப் பங்காக (டிவிடெண்ட்), மொத்த டிவிடெண்டாக ரூ. 192.99 கோடியை மத்திய அரசுக்கு கடந்த 2017, மார்ச் 31ம் தேதி அளித்திருக்கிறது.

“கூகுள் ஃபைபர்” நிறுவனம் “ஃபைபரிலிருந்து வளாகத் திட்டத்திற்கு” அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் உயர் ஆற்றல் மிக்க அகண்ட அலைவரிசைத் திறனும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளையும் கொண்டது.  எரிக்ஸன், மாஸ்டெக், ஏடி அண்ட் டி, ஸோயா ஆகிய நிறுவனங்களைத் தனது தொழில்நுட்பக் கூட்டாளிகளாக சில சர்வதேச நிறுவனங்களை கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. அந்தக் கூட்டாளி நிறுவனங்கள் பல்வேறு செயல்பாடுகளுக்கான தங்களது பணிகளை துணை ஒப்பந்தமாக அளிக்கின்றன. அவற்றுள் டெல்டெக் நிறுவனம் ஆஸ்டின் (டெக்ஸஸ்) நகரிலும் சான்ஜோஸ் (கலிபோர்னியா) நகரிலும் நெட்வொர்க் பணிகளைச் செயல்படுத்துவதற்காக  மாஸ்டெக் மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடன் மிகப் பெரிய சேவை உடன்பாட்டை மேற்கொண்டுள்ளன. டெல்டெக் குழுமம் மூன்று திட்டங்களை நிறைவேற்ற  தொழில்நுட்ப, வர்த்தக, போக்குவரத்துக்குத் துணைபுரிவதற்கு டிசிஐஎல் நிறுவனத்தை அணுகியுள்ளது. 2016 மே 27ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒத்துழைப்பு உடன்பாட்டைத் தொடர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனத்துடன்  டெல்டெக் டீம் குழுமம் 2016, ஏப்ரல் 13ம் தேதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு  ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனத்தின் வெளிநாட்டில் இயங்கும் நிறுவனம் என்ற வகையில் தனி வரிவிதிப்பு முறையின் கீழ் வருவதற்காக சி கார்ப்பரேஷன் அமைக்க வேண்டியிருக்கிறது. (சி கார்ப்பரேஷன் எனப்படும் தொழில்நிறுவன வகையில் இடம்பெறும் நிறுவனம் தானும் தனியாக வரி செலுத்த வேண்டும். அதன் பங்குதாரர்களும் வரி செலுத்த வேண்டும்). இதன் மூலம் டிசிஐஎல் வெளிநாட்டில் பணியமர்த்தும் ஊழியர்களுக்கு “எல் 1” விசா பெற வழியேற்படும்.

 

 

 

 

****



(Release ID: 1525762) Visitor Counter : 134


Read this release in: English , Telugu