மத்திய அமைச்சரவை

வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தை மூட அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2018 8:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை (மார்ச் 21) தில்லியில் கூடியது. அக்கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின்  இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தை (India Development Foundation of Overseas Indians (IDF-OI)) மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய தூய்மைக் கங்கைத் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் (National Mission for clean Ganga and Swachh Bharat Mission) ஆகிய இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு புலம்பெயர் இந்தியர்கள் அளிக்கும் நிதியைத் தொகுத்து  அளிப்பதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பின்னணி:

 

அ. வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலில் 2008ம் ஆண்டு தன்னாட்சி கொண்ட ஆதாயமில்லாத அமைப்பாக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வள்ளன்மையுடன் மேற்கொள்ளும் உதவிக்குத் துணைபுரியும் வகையில் இந்தியாவில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.

ஆ. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் முதல் 2015ம் ஆண்டு மார்ச் வரையில் இந்தியர்களிடமிருந்து  மொத்தம் ரூ. 36.80 லட்சம் அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது. அதையடுத்து, 2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, தேசிய தூய்மைக் கங்கைத் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் (National Mission for clean Ganga and Swachh Bharat Mission) ஆகிய இந்திய அரசின் முதன்மைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசுகளின் சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தில் (IDF-OI) இணைக்கப்பட்டன.

 

இ.  2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018ம் ஆண்டு மார்ச் வரையில் அறக்கட்டளைக்கு மொத்தம் ரூ. 10.16 கோடி கிடைத்துள்ளது. அதில் பெரும்பாலான நிதிப் பங்களிப்பு தேசிய தூய்மைக் கங்கைத் திட்டத்துக்கோ (National Mission for clean Ganga)  அல்லது தூய்மை இந்தியா இயக்கத்துக்கோ (Swachh Bharat Mission) பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு திட்டங்களும் சம்பந்தப்பட்ட முகமைகளின் மூலம் தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன. எனவே, இத்தகைய பணிகளை இணைத்துச் செயல்படுத்துவது, திறனை மேம்படுத்துவது, இரட்டைப் பணிகளைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தின் அறங்காவலர் குழுவின் 9ஆவது கூட்டத்தில் அந்த நிறுவனத்தை வரும் 2018, மார்ச் 31ஆம் தேதியுடன் பணிகளை நிறுத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 

 

 

 

****


 


(Release ID: 1525753)
Read this release in: English , Telugu