பிரதமர் அலுவலகம்

உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான முறைசாராக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களும் உயர்நிலைப் பிரமுகர்களும் பிரதமரைச் சந்தித்தனர்.

Posted On: 20 MAR 2018 5:34PM by PIB Chennai

உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான முறைசாராக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களும் உயர்நிலைப் பிரமுகர்களும் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திரமோடியைச் சந்தித்தனர்.

அப்போது, நடைபெற்ற கலந்துரையாடலில், பலதரப்பு வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.  இந்த அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக இந்தியாவுக்கு பல அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தப் பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான முறைசாராக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் ஆக்கபூர்வமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விதிகள் அடிப்படையிலான அனைத்தையும் உள்ளடக்கிய, ஒருமனதான கொள்கைகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறையை செயல்படுத்துவதில், இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். வலுவான பிணக்கு தீர்ப்பு அமைப்பு உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கியப் பயன்களில் ஒன்று என்று பிரதமர் கூறினார்.

பலதரப்பு வர்த்தக அமைப்புக்கு எதிரான சவால்களை எதிர்கொள்வது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.  தோஹா சுற்றுப் பேச்சுக்களிலும், பாலி அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திலும் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார்.

மிகவும் குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளுக்கான இரக்கத்தன்மை கொண்ட அணுகுமுறையின் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த முறைசாராக் கூட்டத்திற்கு இந்தியா விடுத்த அழைப்புக்கு உற்சாகமான வரவேற்பு இருந்தது குறித்து, பிரதமர் திருப்தி தெரிவித்தார்.  இது, பலதரப்பு தன்மை, உலக வர்த்தக அமைப்பின் கொள்கை ஆகியவற்றின் மீதான உலக நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும் பிரதமர் கூறினார்.

மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

--------



(Release ID: 1525422) Visitor Counter : 121