பிரதமர் அலுவலகம்

தில்லி காசநோய் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

காசநோய் பாதிப்பு இல்லாத இந்தியா பிரச்சார இயக்கமும் தொடங்கப்பட உள்ளது

Posted On: 12 MAR 2018 2:23PM by PIB Chennai

தலைநகர் புதுதில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறும் தில்லி காசநோய் உச்சிமாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியாவுக்கான மண்டல அலுவலகம் (SEARO) மற்றும் காநோய் தடுப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

     “காசநோய் பாதிப்பு இல்லாத இந்தியா” பிரச்சார இயக்கத்தையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்தப் பிரச்சார இயக்கம், காசநோய் ஒழிப்பு முனைப்புக்கான தேசிய செயற்திட்டத்தை ஒரு இயக்கம் போன்று மேற்கொள்ளும். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், தரமான முறையில் நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், 12,000 கோடி ரூபாய் செலவில், அடுத்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ள, காசநோய் ஒழிப்பு தேசிய செயல்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ மனைகளை நாடும், காசநோயாளிகள் மற்றும் காசநோய் கண்டறியப்படாதவர்களிடம் இந்நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான பல்நோக்கு அணுகுமுறையை, புதிய தேசிய செயல்திட்டம் மேற்கொள்ளும்.

     2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை, உலக சுகாதார அமைப்பின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கிற்கு ஐந்தாண்டுகள் முன்னதாகவே செயல்படுத்தி முடிக்க, திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 



(Release ID: 1523848) Visitor Counter : 142