ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமர் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் ரூ. 2.50 மதிப்புள்ள 100% மக்கும் தன்மையுள்ள சுகாதார பஞ்சுக்குட்டை திட்டமான 'சுவிதா' தொடங்கப்படுவதாக அரசு அறிவித்தது.

Posted On: 08 MAR 2018 3:46PM by PIB Chennai

   இந்த சுகாதார பஞ்சுக்குட்டை (சானிடரி நாப்கின்கள்) இந்தியாவின் வாய்ப்பு வசதிகளற்ற பெண்களுக்கு சுத்தம், சுகாதாரம் மற்றும் வசதி ஆகியவற்றை உறுதி செய்யும்: திரு அனந்த குமார்

   பிரதமர் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் ரூ. 2.50 மதிப்புள்ள 100% மக்கும் தன்மையுள்ள சுகாதார பஞ்சுக்குட்டை திட்ட 'சுவிதா'  தொடங்கப்படுவதாக மத்திய ரசாயன பொருட்கள், உரங்கள் மற்றும் நாடாளுமன்ற  விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த குமார் இன்று (8.3.2018)  புதுதில்லியில் அறிவித்தார். இந்த குறைந்த விலை சுகாதார பஞ்சுக்குட்டை நாடெங்கும் உள்ள 3200 மக்கள் மருந்து மையங்களில் ரூ.2.50-க்கு  கிடைக்கும். இந்தியாவின் வாய்ப்பு வசதிகளற்ற பெண்களுக்கு இது சுத்தம், சுகாதாரம் மற்றும் வசதியை உறுதி செய்யும்.  நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு அனந்த குமார், மருந்துகள் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின்  அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான சுகாதார  சேவை என்ற நெடுநோக்கு நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று கூறினார்.

   சர்வதேச மகளிர் தினத்தின் போது இது அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசாக அமையும் என்று திரு அனந்த குமார் கூறினார். இந்த தனித்தன்மை வாய்ந்த பொருள் குறைந்த விலையில் சுகாதாரத்தையும், பயன்படுத்துவதற்கு வசதியையும் எளிதாக அகற்றிவிடுவதற்கு வசதியையும் பெற்றிருக்கும் என்றார். நாட்டின் அனைத்து மக்கள் மருந்து மையங்களில் உலக மாதவிடாய் சுகாதார தினமான 2018 மே மாதம் 28ம் தேதி முதல் இது கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

   2015-2016 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கும் 28 வயதுக்கும் உட்பட்ட பெண்களில் 58% பேர் உள்ளுரிலேயே தயாரித்த நாப்கின்கள், சானிடரி நாப்கின்கள் மற்றும் உறிபஞ்சுகள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 78% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பாதுகாப்பு  முறைகளை கடைப்பிடிக்கின்றனர்: கிராமப்புறத்தை பொறுத்தவரை 48% பெண்களுக்கு மட்டுமே தூய்மையான சானிடரி நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர்.

   இன்றைய நிலையில் சந்தைகளில் கிடைக்கும் பிரபலமான பெயர் கொண்ட சானிடரி நாப்கின்களை அதிக விலை காரணமாக பயன்படுத்த இயலாத நாட்டின் பெண்கள் இன்னும் சுகாதாரமற்ற துணி வகைகளையே மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் இந்த  பிரிவினருக்கு சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான தேவை இத்திட்டத்தால் நிறைவு செய்யப்படுவதாக திரு அனந்த குமார் கூறினார். சுகாதாரமற்ற துணிவகைகளை பயன்படுத்துவதால் பூஞ்சை தொற்று சினைக்குழாய் தொற்று, சிறுநீர்க்குழாய் தொற்று, புற்றுநோய் ஆகியன ஏற்பட ஏதுவாகிறது. மேலும் இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை  ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் மக்கும் தன்மையற்ற சானிடரி நாப்கின்களை அகற்றுவதில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் சுவிதா திட்டத்தில் வழங்கப்படும் சானிடரி நாப்கின்கள் தூய்மையை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

 

   நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ரசாயனப் பொருட்கள், உரங்கள், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திரு மன்சுக் லால் மண்டாவியா மக்கும் தன்மை என்ற பதத்திற்கான விளக்கத்தை செய்தியாளர்களுக்கு விளக்கினார். சுவிதா திட்டத்தில் வழங்கப்படும் சானிடரி நாப்கின்களில் சிறப்பாக சேர்க்கப்படும் பொருள் காரணமாக அதற்கு மக்கும் தன்மை ஏற்பட்டுவிடுவதாகவும், பயன்படுத்தி அகற்றப்பட்ட உடன், காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரியும் இந்த சிறப்பு பொருள், அதனை மக்கச் செய்துவிடுகிறது என்றார். இன்றைய நிலையில் சந்தையில் சானிடரி நாப்கின்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.8 விலையில் விற்கப்படுவதாகவும், சுவிதா திட்டம் தொடங்கப்படும்  போது வழங்கப்படும் சுகாதார பஞ்சுக்குட்டைகள் ஒவ்வொன்றும் ரூ.2.50-க்கு கிடைக்கும் என்று கூறினார். இதனால் வாய்ப்பு வசதிகளற்ற பெண்கள் குறைந்த விலையில் அடிப்படை சுகாதாரத்தை  பேணுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

  பிரதமரின் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் வினியோக சங்கிலி மேலாண்மை பற்றி குறிப்பிட்ட திரு மண்டாவியா வினியோக சங்கிலியை தமது அமைச்சகம் தொடர்ந்து திருத்தி அமைத்து வருவதாகவும் ஆன்லைன் மென்பொருள் மூலம் அடிப்படை மருந்துகள் தடையின்றி வழங்கப்படுவதை கண்காணித்து வருவதாகவும் கூறினார். இந்த அமைப்பின் வெற்றி பற்றி குறிப்பிட்ட அமைச்சர், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் வினியோக சங்கிலி மேலாண்மையை  இன்று தனியார் நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டிற்காக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மருந்துகள் துறை செயலாளர் திரு ஜெ பி பிரகாஷ், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு பிப்லாக் சாட்டர்ஜி மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

----------------------


(Release ID: 1523403)
Read this release in: English