PIB Headquarters

உலகப் பல்லுயிர் நிதி முன்முயற்சி மூன்றாவது மாநாடு, 6-8 மார்ச் 2018

Posted On: 07 MAR 2018 4:09PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய பல்லுயிர் ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து உலக பல்லுயிர் நிதி முன்முயற்சி 3-வது மாநாட்டை இந்தியா மார்ச் 6 முதல் 8-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்துகிறது.

இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் பல்லுயிர் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உலக இலக்கை இந்தியா கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல்லுயிர் பாதுகாப்புக்கு நிதி அளிக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், இது மிகப் பெரிய சவாலாகவும் உள்ளது என தெரிவித்தார்.  இந்த மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும் தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பல்லுயிர் நிதி கூட்டு முன்முயற்சியில் ஈடுபட்டுள்ள 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல், நிதி, திட்டமிடுதல் மற்றும் தொடர்புடைய அரசுத் துறைகளின் அமைச்சர்கள், ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களின் பிரதிநிதிகள், நிதி அளிக்கும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தனியார் துறையினர், முக்கிய வல்லுனர்கள் என ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.


(Release ID: 1522969)
Read this release in: English