கலாசாரத்துறை அமைச்சகம்
ஹிரிதய் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட 12 நகரங்களுக்கு ரூ.240 கோடிக்கும் கூடுதலாக விடுவிப்பு
Posted On:
05 MAR 2018 5:48PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி மத்திய திட்டமான தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் தரம் உயர்த்துதல் திட்டம் – ஹிரிதய் 2015 ஜனவரி 21-ந் தேதி மொத்தம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
ஹிரிதய் திட்டம் இந்தியாவிலுள்ள பாரம்பரிய நகரங்களில் தனித்தன்மையையும், ஆன்மாவையும் பாதுகாத்து புத்துயிரூட்டுவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் அஜ்மீர், அமிர்தசரஸ், அமராவதி, பதாமி, துவாரகா, கயா, மசூரா, பூரி, வாரணாசி, வாராங்கல் ஆகிய 12 நகரங்கள் மேம்பாட்டிற்கென அடையாளம் காணப்பட்டுள்ளன. ஹிரிதய் திட்டத்தின் இயக்க காலம் 2018 நவம்பர் வரை ஆகும்.
ஹிரிதய் திட்டத்தின் கீழ், அடிப்படை வசதி திட்டங்களுடன் இணைந்த பாரம்பரிய மேம்பாடு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். இவற்றில் நகர்ப்புற அடிப்படை வசதியை புத்துயிரூட்டுவது, நகரங்களின் பாரம்பரிய, சமயம் சார்ந்த, பண்பாடு மற்றும் சுற்றுலா சொத்துக்கள் உள்ள பகுதியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தண்ணீர் வழங்குதல், சுகாதாரம், வடிகால், கழிவு மேலாண்மை, அணுகுசாலைகள், நடந்து செல்லும் பாதைகள், தெரு விளக்குகள், சுற்றுலா வசதிகள், மின் கம்பி இணைப்பு, அழகு படுத்துதல் போன்ற மேம்பாட்டு பணிகள் திட்டத்தில் சேர்க்கப்படும்.
இதுவரை 12 ஹிரிதய் நகரங்களில் ரூ.421.47 கோடி தொகை 63 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.241.26 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பண்பாட்டுத்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா இத்தகவலை தெரிவித்தார்.
---
(Release ID: 1522640)
Visitor Counter : 161