பிரதமர் அலுவலகம்

வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய - வியட்நாம் கூட்டறிக்கை (மார்ச் 03, 2018)

Posted On: 04 MAR 2018 9:39AM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவர்  மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களுடைய அழைப்பின் பேரில், வியட்நாம் அதிபர் மாண்புமிகு திரு. ட்ரான் டாய் க்வாய் அவர்களும், அவருடைய மனைவியும் இந்தியாவில் 2018  மார்ச் 02 முதல் 04 வரையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர். வியட்நாம் அதிபருடன் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவினரும் வந்திருந்தனர். அதில் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான மாண்புமிகு திரு. பாம் பின்ஹ் மின்ஹ் மற்றும் பல அமைச்சகங்கள், மாகாணங்களின் தலைவர்களும், அதிக அளவில் தொழில் துறைப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

     இந்த வருகையின் போது வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் க்வாங் அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் வரவேற்றார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவருடன் அவர் பேச்சு நடத்தியதுடன், குடியரசுத் தலைவர் அளித்த அரசு விருந்தில் பங்கேற்றார். பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடன் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். மாண்புமிகு மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன், மாண்புமிகு வெளியுறவு அமைச்சர்  திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வேறு பல தலைவர்களை அதிபர் ட்ரான் டாய் க்வாங் சந்தித்துப் பேசினார். வியட்நாம் - இந்தியா தொழில் அமைப்பிலும் அவர் உரையாற்றினார். இந்திய தொழில், வர்த்தகத் துறையில் ஏராளமான முன்னணி தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவர் புத்தகயாவுக்கு சென்று வந்தார்.

     இந்தியா மற்றும் வியட்நாம் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை, கனிவான, சுமுகமான மற்றும் நட்பான சூழலில் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடி 2016-ல் வியட்நாமுக்கு வெற்றிகரமாக மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகள் கணிசமாக வலுப்பெற்றிருப்பதையும், பல அம்சங்களில் பங்கேற்புகள் மேம்பட்டிருப்பதையும் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு பங்களிப்புகள் குறித்த உறவு மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும் இது இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அணுமின் சக்தி, வர்த்தகம், வேளாண்மை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவதை அதிபர் ட்ரான் டாய் க்வாங், பிரதமர் மோடி ஆகியோர் பார்த்தனர்.

     பொருளாதாரம், சமூக மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகளை அதிபர் ட்ரான் டாய் க்வாங் பாராட்டினார். பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில் தனது பங்கு மற்றும் நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார். சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் முக்கிய சாதனைகள் நிகழ்த்தியமைக்காக வியட்நாமுக்கு குடியரசுத் தலைவர் கோவிந்த் அவர்களும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பிராந்தியத்திலும், உலக அளவிலும் முக்கியமான பங்களிப்பு ஆற்றும் வகையில், தொழில்மயமாக்கப்பட்ட நாடாக மாறுவது என்ற லட்சியத்தை வியட்நாம் விரைவில் எட்டும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

     இரு நாடுகளுக்கு இடையில் காலம் காலமாக நீடித்து வரும் நீண்ட கால உறவை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளின் தலைவர்கள் மகாத்மா காந்தி, அதிபர் ஹோ சி மின்ஹ் ஆகிய தலைவர்களால் அடித்தளமிடப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் இரு நாடுகளின் மக்களால் வளர்க்கப்பட்ட இந்த உறவைப் பேணுவதற்கு உறுதியளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு பங்களிப்பு செம்மையாக இருப்பதாக இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. நட்புணர்வு ஆண்டு 2017ல் தூதரக உறவுகளின் 45வது ஆண்டு நினைவு மற்றும் பாதுகாப்பு பங்களிப்பில் பத்தாவது ஆண்டு ஆகியவற்றை ஒட்டி, இரு நாடுகளிலும் நடத்தப்பட்ட பல்வேறு நினைவு கொண்டாட்ட நிகழ்வுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நட்புணர்வு ஆண்டில் வெற்றிகரமாக நிறைவடைந்த ``இந்தியாவில் வியட்நாம் நாட்கள்'' நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமைக்காக இந்த நாளில் அதிபர் ட்ரான் டாய் க்வாங் பாராட்டு தெரிவித்தார்.

     இப்போதுள்ள செம்மையான உறவுகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகள், அரசுகள், பேரவை அமைப்புகள் மற்றும் மாகாணங்கள் / மாநிலங்கள் என அனைத்து நிலைகளிலும், மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வதற்கு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ள துறைகள் குறித்து ஆய்வு செய்யவும், 2017 - 20 காலக்கட்டத்திற்கான விரிவான பாதுகாப்பு பங்களிப்பிற்கான செயல் திட்டத்தை அமல் செய்வதை ஆய்வு செய்யவும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் 2018ல் அடுத்த கூட்டுக் கமிட்டிக் கூட்டத்தை நடத்துவது என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு

     விரிவான பாதுகாப்பு பங்களிப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கியமான மற்றும் சிறப்பான தூணாக இருக்கும் என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் மூத்த நிலையிலான பிரதிநிதிகள் குழுக்கள் பரிமாற்றம், ஆலோசனை நடைமுறைகளுக்கான கூட்டங்கள், ராணுவப் படைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்புகள் மற்றும் கணினிசார் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் மேம்பாடு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எல்லா வகைகளிலும் ஒடுக்குவது, எல்லை கடந்த குற்றச் செயல்களைத் தடுப்பது, சட்டவிரோதமாக ஆட்கள் நுழைவது மற்றும் போதை மருந்து கடத்தலைத் தடுப்பது, கடல்சார் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விஷயங்களில் உள்ள முன்னேற்றங்களை அவர்கள் வரவேற்றனர்.

          ஐக்கிய நாடுகள் சபை கருத்திற்கு உள்பட்டு  திறந்த, தாராளமான, பாதுகாப்பான, நீடித்த, அமைதியான, அணுகுதல் வசதி கொண்ட கணினிசார் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். கணினிசார் துறைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை சிறப்பாக அமல் செய்யவும், அதிக ஒத்துழைப்பு ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்துக்கும், வியட்நாமில் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தி, பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், துணை அமைச்சகங்கள் அளவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், திறன் வளர்ப்புத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

     வியட்நாமுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் பங்களிப்பு செய்யவும், வியட்நாமின் திறன்கள் மற்றும் தகுதிகளை கட்டமைப்பு செய்வதில் பங்களிப்பு செய்யவும் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. வியட்நாம் எல்லைப் பாதுகாப்புக் காவல் படைக்கு அதிவேக கண்காணிப்பு படகுகள் உருவாக்க 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளிக்கும் திட்டத்தை விரைந்து அமலாக்குவதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பாதுகாப்புத் தொழில்துறைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளிக்கும் ஒப்பந்தத்துக்கான வரையறைகள் குறித்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறை உறவுகளை இன்னும் மேம்படுத்துவதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மூத்த நிலையில் உள்ள பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழுவினர் பரிமாற்றம், மூத்த நிலையில் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள், இரு தரப்பு ராணுவப் படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பு, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்களுக்கு துறைமுக அழைப்புகள், திறன் வளர்ப்புத் திட்டங்கள், தளவாடங்கள் கொள்முதல், தொழில்நுட்பம் கற்றுத் தருதல், ADMM ப்ளஸ் உள்பட பிராந்திய அமைப்புகளில் ஒத்துழைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

     கடல்சார் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடற்கொள்ளை தடுப்பு, கடல்வழித்தடங்கள் பாதுகாப்பு, ராணுவம் சாராத வர்த்தகக் கப்பல் பயணங்கள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். 2018 ஜனவரியில் புதுடெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு குறித்த ஆசியான் - இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கான  முன்மொழிவின்படி, கடல்சார் விஷயங்களில் வியட்நாம் - இந்தியா இடையில் இருதரப்பு ஆலோசனைகளை மேலும் அதிகரிப்பது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

     அனைத்து வகையான பயங்கரவாத செயல்களுக்கும், எல்லை கடந்த பயங்கரவாதம் உள்பட தீவிரவாதம் பரவுவதற்கும் இரு தரப்பிலும் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிக மோசமான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் இருக்கிறது என்ற இந்தியாவின் கவலையை வியட்நாம் தரப்பும் பகிர்ந்து கொண்டது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என வியட்நாம் தரப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. எந்த மதம், தேசியம், நாகரிகம் அல்லது இன குழுக்களுடனும் பயங்கரவாதம் தொடர்பு கொண்டிருக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொண்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விரிவான அணுகுமுறை ஒன்றை கையாள வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் இரு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்வது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள்தேர்வு, பயிற்சி அளித்தல், அனுப்பி வைத்தல், வெளிநாட்டு பயங்கரவாதிகளாக அனுப்பி வைப்பது, திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் நிதி திரட்டும் செயல்களைத் தடுப்பது, பண சுழற்சி மோசடிகள், பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கடத்துவது, போதை மருந்து கடத்தல் மற்றும் இதர குற்றச் செயல்பாடுகள், பயங்கரவாத முகாம்களை அழிப்பது, அவர்களுக்குப் புகலிடமாக உள்ள தளங்களை அழிப்பது, சமூக வலைத்தளம் உள்பட இன்டர்நெட், கணினிவசதிகளை தவறாகப் பயன்படுத்துதல், தகவல் தொடர்பு நுட்பங்களை பயங்கரவாத குழுக்களும், அவர்களின் ஆதரவு அமைப்பினரும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும். சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான  திட்டங்களை விரைவில் அமலாக்குவதற்கு வலுவான கருத்தொற்றுமையை உருவாக்குவதில் ஒத்துழைப்பு அளிப்பது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பொருளாதார உறவுகள்

     வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடுகளை மேம்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்த நோக்கம் என்றும், விரிவான பாதுகாப்பு பங்களிப்பில்  முக்கியமான அம்சம் என்றும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவசியமானது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வர்த்தக விற்றுமுதலில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து இரு தரப்பு தலைவர்களும் பாராட்டும், திருப்தியும் தெரிவித்தனர். வர்த்தகத்தின் அளவை அதிகரிக்கவும், அதன்  வகைப்பாடுகளை  விரிவுபடுத்தவும் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு, 2020 ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகத்தை பெருக்குவது என்ற இலக்கை அடைவதற்கான  குறிப்பிடத்தக்க மற்றும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. உருவாக்கி வைக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பயன்படுத்துவது, வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள் பரிமாற்றம் செய்வதை வலுப்படுத்துவது, வணிக அளவில் தொடர்புகளை வலுப்படுத்துவது, தொழில் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது என்பவை இதில் அடங்கும். இவை மட்டும் தான் வரம்பு என இல்லாமல் ஆய்வுகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வர்த்தகம் குறித்த கூட்டு துணை கமிஷனின் அடுத்த கூட்டத்தை 2018ல் கூடிய விரைவில் ஹானோய் நகரில் நடத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

     ஹைட்ரோகார்பன்கள், மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எரிசக்தி, சிக்கனம், கட்டமைப்பு, ஜவுளி, காலணி, மருந்துகள், இயந்திர உபகரணங்கள், வேளாண்மை மற்றும் வேளாண் பொருட்கள், சுற்றுலா, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர சேவைத் துறை தொழில்கள் போன்ற முன்னுரிமை துறைகளில் ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவது என்று இரு நாடுகளின் தொழில் வர்த்தக தலைவர்களும் வலியுறுத்தினர். வேளாண்மைத் துறையில் உற்பத்தி, அளவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் தீவிரம் காட்டுவது என்றும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

     வியட்நாம் மற்றும் இந்தியா இடையில் இருதரப்பு அதிக அளவில் முதலீடுகள்  செய்வதை ஊக்குவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டததின் கீழ், முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள வியட்நாம் கம்பெனிகளை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய கம்பெனிகள் வியட்நாமில் முதலீடு செய்ய வேண்டும் என அதிபர் ட்ரான் டாய் க்வாங் அழைப்பு விடுத்தார். வியட்நாம் சட்டங்களுக்கு உள்பட்டு, இந்திய முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித் தரவும், வசதிகள் அளிக்கவும் அவர் உறுதியளித்தார். ``தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில்'' இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

வளர்ச்சியில் ஒத்துழைப்பு

     வியட்நாமுக்கு தொடர்ந்து மானிய உதவிகள் மற்றும் கடன் வசதிகளை நீண்டகாலமாக இந்தியா அளிப்பதற்கு அதிபர் ட்ரான் டாய் க்வாங் வெகுவான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். வியட்நாம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உதவித் தொகைகளை உயர்த்தியமைக்காக இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டம், மெகாங் - கங்கை ஒத்துழைப்பு (MGC) வரையறை, மற்றும் விரைவான பலனளிப்புத் திட்டங்களுக்கான (QIP-கள்) நிதியின் கீழான திட்டங்களுக்காக அவர் நன்றி தெரிவித்தார். ITEC திட்டத்தின் கீழ், பயன்தரக் கூடிய துறைகளில், வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு பிரதமர் மோடி முன்வந்தார். CLMV நாடுகளில், டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கும் வகையில், கிராமப்புறங்களை இணைக்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை மேற்கொள்வது என்று, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா நினைவு உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு செய்ததற்கு அதிபர் ட்ரான் டாய் க்வாங் பாராட்டு தெரிவித்தார். இந்திய ஐ.ஐ.டிகளில் ஒருங்கிணைந்த பிஎச்.டி. பயில்வதற்கு ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 1000 பேருக்கு கல்வி உதவித் தொகை அளிக்க முன்வந்ததற்கும் பாராட்டு தெரிவித்தார்.

எரிசக்தி ஒத்துழைப்பு

     கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறிதல், அனல் மற்றும் நீர்மின்சக்தி மற்றும், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மின்சார சேமிப்பில் ஒத்துழைப்பு  காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வியட்நாமில் நிலம் மற்றும் கடலை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிரத்யேகமான பொருளாதார மண்டல (EEZ) பகுதிகளில்  கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறியும் ஆய்வுகளை இந்திய தொழில் நிறுவனங்கள் விரிவுபடுத்துவதற்கு அதிபர் ட்ரான் டாய் க்வாங் வரவேற்பு தெரிவித்தார். இதற்காக, வியட்நாம் தரப்பில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய பகுதிகள் குறித்து இந்திய நிறுவனங்கள் உறுதியான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நிலை நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிதலில் கூட்டு முயற்சி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பை தீவிரமாக முன்னெடுத்துச்  செல்வது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வியட்நாமில் மிதமான ஓட்டம் உள்ள மற்றும் குறைவான ஓட்டம் உள்ள பகுதிகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு வியட்நாம் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

     வியட்நாமில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிலும், மின்சார சேமிப்புத் திட்டங்களிலும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதை அதிபர் ட்ரான் டாய் க்வாங் வரவேற்றார். அணுசக்தியை அமைதி வழியிலான திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி அணு உலை கட்டமைப்பு செய்வதற்கு வியட்நாமுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

     புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், சர்வதேச சூரியசக்தி கூட்டுத் திட்டம் குறித்த வரையறை ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியாவின் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை வியட்நாம் தரப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டது. 

கலாச்சாரம், கல்வி மற்றும் மக்கள் அளவிலான பரிமாற்றங்கள்

     கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்கள் அளவிலான பரிமாற்றங்கள் துறைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும், கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை அதிகப்படுத்தவும்,  இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் நாகரிகம் சார்ந்த மற்றும் வரலாற்றுக் கலாச்சாரத்தை புதுப்பித்து, மறுதொடர்பு ஏற்படுத்துவதற்கு,  தொல்லியல் துறை, தொன்மை பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகங்கள் துறைகளில்  தீவிரப்படுத்துவதற்கும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இந்தியாவில் வியட்நாம் கலாச்சார மையம் ஒன்றை உருவாக்கும் வியட்நாமின் திட்டத்துக்கு இந்தியா வெகுவாகப் பாராட்டு தெரிவித்தது.

     வியட்நாமில் க்வாங் நாம் மாகாணத்தில் யுனெஸ்கோ உலக கலாச்சார பாரம்பரிய தலமான மை சன் பகுதியின் தொன்மையைப்பாதுகாத்து புதுப்பிக்கும் திட்டத்தை சிறப்பாக அமல் செய்வதை இரு தலைவர்களும் பாராட்டினர். ஹோ லாய் கோபுரம்( Hoa Lai Tower) மற்றும் போ கிளாங் கராய் கோபுரம் (Po Klong Garai Cham Tower ) மீட்டுருவாக்கல் மற்றும் தொன்மை பாதுகாப்புக்கு இந்தியா கடன் அளித்திருப்பதற்கு வியட்நாம் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. நின் துவான் ( Ninh Thuan) மாகாணத்தில் Cham சமுதாயத்திற்கான மானிய உதவி, பு தோ (PhuTho), வின்புக் ( VinhPhuc) மற்றும் பிற மாகாணங்களில் சுமார் 500 வியட்நாமியர்களுக்கு செயற்கை ஜெய்ப்பூர் கால்கள் வழங்குவது மற்றும் மறுவாழ்வு வசதி செய்து தருவதில் இந்திய அரசு மற்றும் பகவான் மகாவீர் விக்லான் சகாயதா சமிதியின் (BMVSS) முயற்சிகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

 தொடர்பு வசதி

     வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலும், ஆசியான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலும் வலுவான தொடர்பு வசதிகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. CLMV நாடுகளுக்காக இந்தியா வைத்திருக்கும் பல திட்டங்களை வியட்நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியாவின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இயல்புநிலை மற்றும் டிஜிட்டல் தொடர்பு திட்டங்களுக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான கடன் வசதியும் இதில் அடங்கும். இந்தியா - மியான்மர் - தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை போன்ற பிராந்திய தொடர்பு வசதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தை கம்போடியா மற்றும் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு  வழியாக வியட்நாம் வரையில் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

     ஆசியான் - இந்தியா கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தியா மற்றும் வியட்நாம் இடையில் கடல் துறைமுகங்களுக்கு இடையே நேரடி கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் பயணத்தின் போது புதுடெல்லிக்கும் ஹோ-சி-மின் நகருக்கும் இடையில் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களுக்கு இடையில் இன்னும் அதிக அளவில் நேரடி விமான சேவைகளை விரைவில் தொடங்க வேண்டும் என இரு நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிராந்திய ஒத்துழைப்பு

     ஆசியாவில் நிலவும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை உள்பட, பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து தங்களின் ஒருமித்த கருத்துகளை பிரதமர் மோடியும், அதிபர் ட்ரான் டாய் க்வாங்கும் பகிர்ந்து கொண்டனர். இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம், சுதந்திரமான கடல் பயணம், வான்வழி பயணம், நீடித்த வளர்ச்சி மற்றும் தாராளமான, நியாயமான மற்றும் திறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய இந்திய - பசிபிக் பிராந்தியம் வளம் பெறவும், அமைதியை உருவாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

     இதுபோன்ற திறந்த, வெளிப்படையான, பங்கேற்புடன் கூடிய, விதிகள் அடிப்படையிலான பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பதிலும், ஆசியான் அமைப்புடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும்  இந்தியாவும் வியட்நாமும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 2015-18 காலக்கட்டத்தில் ஒருங்கிணைப்பு நாடு என்ற பொறுப்பில் வியட்நாமின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் ஜனவரி 2018ல் ஆசியான் - இந்திய நினைவு உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆசிய - இந்தியா பாதுகாப்பு பங்கேற்புகளை மேலும் மேம்படுத்துவதற்கு தில்லி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை அமல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிராந்திய கட்டமைப்பை ஏற்படுத்துவதில் ஆசியானின் மைய கருத்துக்கு இந்தியா அளித்த ஆதரவுக்கும், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளமைக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வதற்கும், ஆசியான் ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியான் சமுதாய வளர்ப்பு செயல்பாடுகளுக்கும் அதிபர் ட்ரான் டாய் க்வாங் பாராட்டு தெரிவித்தார்.

     இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆசியான் வரையறைகள் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை வலுப்படுத்துவதற்கான துணை பிராந்திய வரையறைகளின் முக்கியத்துவம் பற்றி அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. தற்போது அமலில் உள்ள துணை பிராந்திய வரையறைகளை பயன்படுத்தி, குறிப்பாக மெகாங்- கங்கை பொருளாதார பகுதிக்கான வரையறைகளை, அதிகபட்ச அளவில் மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பலதரப்பு ஒத்துழைப்பு

     பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் தங்களின் இணைந்த செயல்பாடுகளுக்கு இரு தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மரபை பின்பற்றுவது என அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில், நிரந்தரம் அல்லாத உறுப்பினர் என்ற பிரதிநிதித்துவத்திற்கு, வியட்நாமுக்கு 2020 - 2021 காலக்கட்டத்திற்கும், இந்தியாவுக்கு 2021 - 22 காலக்கட்டத்திற்கும் முன்னிறுத்துவதற்கு பரஸ்பர ஆதரவு தெரிவிப்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். திருத்தியமைக்கப்பட்ட பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதற்கு தொடர்ந்துஆதரவு அளிப்பதை வியட்நாம் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

     இந்திய - பசிபிக் பிராந்தியத்திலும், உலக அளவிலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியைப் பராமரிப்பதில் ஒத்துழைப்பை இன்னும் அதிகப்படுத்துவதில் உள்ள உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் 1982 (UNCLOS) உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின்படி முழுமையாக செயல்படுவதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தினர். தெற்கு சீன கடலில் சுதந்திரமாக கடல் பயணம் மற்றும் வான்வழி பயண வசதியை பராமரித்தல், நல்ல நம்பிக்கைக்கு சர்வதேச அளவில் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அமல் செய்வது, சர்வதே சட்டத்தின்படி,  அச்சுறுத்தல் அல்லது ராணுவ பயன்பாடு இல்லாமல் அமைதிவழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தூதரக மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு முழு மதிப்பு அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, தெற்கு சீன கடல் பகுதியில் உள்ள தரப்பாரின் நடத்தைகள் குறித்த அறிவிக்கையை (DOC) சிறப்பாக முழுமையாக அமல் செய்வதற்கு இருதரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தெற்கு சீன கடல் பகுதியில் நடத்தை விதிகளை விரைவில் இறுதி செய்து சிறப்பாக அமல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     2030-ல் நீடித்த வளர்ச்சிக்கான  செயல்திட்டம் உருவாக்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை (SDG) எட்டுவதில் உறுதி இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். SDG-க்களை எட்டுவதில் உலகளாவிய பங்கேற்புகள் முக்கியமான அம்சமாக உள்ளது என அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதைப் பொருத்த வரையில் அடிஸ் அபாபா செயல் திட்டத்தை இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளித்தவாறு அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

     கருணையுடன் கூடிய விருந்தோம்பலுக்காக குடியரசுத் தலைவர் திரு. கோவிந்த் அவர்களுக்கும், இந்தியாவின் நட்புணர்வான மக்களுக்கும் அதிபர் ட்ரான் டாய் க்வாங் நன்றி தெரிவித்துக் கொண்டார். கூடிய விரைவில் வியட்நாமுக்கு பயணம் வருமாறு குடியரசுத் தலைவர் கோவிந்த் அவர்களுக்கு ட்ரான் டாய் க்வாங் அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவர் கோவிந்த் அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். தூதரகங்கள் மூலமாக பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார்.

 ***


(Release ID: 1522465) Visitor Counter : 547


Read this release in: English , Urdu , Assamese