மத்திய அமைச்சரவை

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மசோதா 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்



Posted On: 01 MAR 2018 6:46PM by PIB Chennai

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு வெளியில் இருந்து கொண்டு பொருளாதார குற்றவாளிகள் இந்திய சட்ட நடைமுறைகளிலிருந்து தப்பிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா தெரிவிக்கிறது.

ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இந்த மசோதாவின் கீழ் வரும்.

தாக்கம் :

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக சட்டத்தின் விதிமுறைகள் இந்த மசோதா மீண்டும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்காக விசாரணை பின்பற்றப்படுவதை எதிர்கொள்வதற்கு அத்தகையோர் இந்தியா திரும்புவதை மசோதா கட்டாயமாக்குகிறது. இத்தகைய குற்றவாளிகள் காரணமாக ஏற்பட்ட நிதி இழப்புகளை திரும்பப் பெறுவதில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த கூடுதல் அளவை எட்டுவதுடன் இத்தகைய நிதி நிறுவனங்களின் பொருளாதார ஆரோக்கிய நிலை மேம்பட மசோதா உதவும்.

குற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து வாங்கப்பட சொத்துக்களை விரைவாக பறிமுதல் செய்வதற்கு சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு தம்மை உட்படுத்தி இந்த குற்றவாளிகள் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை எதிர்கொள்வது இதன்படி கட்டாயமாக்கப்படும்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள் :

i. நபர் ஒருவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவிக்க சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்வது

ii. தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

iii. சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தப்பியோடிய பொருளாதார குற்றவாளிக்கு நோட்டீஸ் அனுப்புதல்

iv. தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரின் குற்றம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தல்

v. இத்தகைய நபர்களின் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட இதர சொத்துக்களை பறிமுதல் செய்தல்

vi. தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சிவில் கோரிக்கைகளை ரத்து செய்தல்.

vii. இந்தச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நிர்வகித்து விற்பதற்கென நிர்வாகி ஒருவரை நியமித்தல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளி இந்தியாவுக்கு தாமாகவே திரும்பி உரிய நீதியியல் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அறிவிப்புக்கு முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட இந்த சட்டப்படியான நடவடிக்கைகளை ரத்து செய்தல். சம்பந்தபட்ட நபருக்கு வழக்கறிஞர் மூலம் தனது வழக்கை எடுத்துரைத்தல், அவருக்கு பதில் அளிக்க காலஅவகாசம் கொடுத்தல், அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்புதல் போன்ற தேவையான அரசியல் கட்ட பாதுகாப்புகளும் அவர் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் வழங்கப்படும். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் உரிமை வழங்கப்படும். இந்த சட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் பறிமுதல் செய்த சொத்துக்களை நிர்வகிக்கவும் விற்பனை செய்யவும் நிர்வாகி ஒருவரை நியமிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

அமலாக்க அணுகுமுறையும் இலக்குகளும்:

தற்போதைய சட்டங்களின் குறைபாடுகளை திருத்தி அமைக்கவும், பொருளாதார குற்றவாளிகள் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தப்பிச்சென்று இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு வெளியே தங்கி விடுதல் ஆகியவற்றை தடுக்க இந்த மசோதா வரையப்பட்டுள்ளது. இந்த மசேதாவின் கீழ் ஒரு நபரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்பவர் பட்டியலிடப்பட்ட குற்றம் தொடர்பாக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர் ஆவார். மேலும் குற்ற வழக்கை தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கி குற்ற நடவடிக்கையை எதிர்கொள்ள இந்தியா திரும்ப மறுப்பவர் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றப்பட்டியல் பட்டியலிடப்பட்ட குற்றம் என குறிக்கப்பெறும். மேலும் நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளால் கூடுதல் சுமையை பெறுவதை தவிர்க்க ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேற்பட்ட மதிப்புள்ள வழக்குகள் மட்டுமே மசோதாவின் கீழ் கொண்டுவரப்படும்.

பின்னணி:

இந்திய நீதிமன்றங்களின் வரம்பிலிருந்து தப்புவதற்காக வழக்கு தொடரப்படுவதை எதிர்பார்த்தோ அல்லது குற்ற நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதோ வெளிநாடுகளுக்கு ஓடிவிடும் பொருளாதார குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். இந்திய நீதிமன்றங்களில் இத்தகைய குற்றவாளிகள் ஆஜராகாமல் இருப்பது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக குற்ற வழக்குகளில் புலனாய்வுக்கு இடையூறாக உள்ளது. இரண்டாவதாக நீதிமன்றங்களின் பொன்னான நேரம் வீணாகிறது. மூன்றாவதாக இந்திய சட்டத்தின் ஆட்சியை நிலைகுலைய வைக்கிறது. மேலும் பொருளாதார குற்ற வழக்குகளில் பல வங்கி கடன்களை திரும்ப செலுத்தாமல் இருப்பது என்பதால் இந்திய வங்கித்துறையின் நிதி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினையின் கடுமையான நிலையை முற்றிலுமாக சமாளிக்க தற்போதைய சிவில் மற்றும் குற்ற சட்ட பிரிவுகள் போதுமானவை அல்ல. எனவே, திறன்பட்ட, விரைவான, அரசியல் சட்டப்பட்ட அனுமதிக்கப்பட்ட தடை நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தத்தின்படி குற்ற தண்டனை இல்லாத வழக்குகளில்  சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தேச மசோதா இந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. மேற்குறித்த விஷயங்கள் அடிப்படையில் அரசின் 2017-18 பட்ஜெட்டில் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், இத்தகைய தப்பியோடியவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டமும் இயற்றப்படும் என்றும் அரசு அறிவித்தது.

                           ----



(Release ID: 1522393) Visitor Counter : 235


Read this release in: English , Assamese