மத்திய அமைச்சரவை

ஆள்கடத்தல் சட்டம் -2018ன் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2018 6:22PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (பிப்ரவரி 280ல் கூடியது. அதில், ஆள் கடத்தல் சட்டம் -2018ன் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த சட்ட முன்வடிவில் உள்ள அம்சங்கள்:

  1. இந்த சட்ட முன்வடிவு ஆள் கடத்தப்படுவதைத் தடுப்பது, கடத்தப்பட்டோரை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது ஆகிய நோக்கங்களுடன் கொண்டு வரப்படுகிறது.
  2. கொத்தடிமை, பிச்சையெடுப்பது, பாலியல் நோக்கில் ரசாயனம், மருந்துகளை பெண்கள் உடலில் செலுத்துதல், திருமணம் செய்வதாகக் கூறியும், திருமணம் செய்தவர்களையும், கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொள்வது.
  3. ஒரு நபரைக் கடத்துவது, அதற்கு வசதி செய்வது, போலியாக சான்றிதழ்களைத் தயாரித்தோ அல்லது ஏற்கெனவே இருக்கும் சான்றிதழில் மோசடியாகத் திருத்தியோ அச்சடித்து, அதைப் பயன்படுத்துவது, அதை அரசிடம் காட்டுவது, ஒப்புதலைப் பெறுவதற்கு மோசடியான செயல்களைச் செய்தல், அதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்தல்.
  4. கடத்தலால் பாதிக்கப்பட்டோர், அதற்குச் சாட்சி அளிப்போர், புகார் தருவோர் குறித்து தகவல்களை வெளியிடாது இருத்தல், பாதிக்கப்பட்டோரிடம் அறிக்கை பெறுவதில் வீடியோ கான்பரன்சிங் முறையை கடைப்பிடித்தல். (இது, எல்லை தாண்டிய சம்பவங்களையும், மாநிலங்களுக்கு இடையிலான கடத்தல் குற்றங்களையும் விசாரிக்க உதவும்)
  5. காலக்  கெடுவுடன் கூடிய நீதி விசாரணை, பாதிக்கப்பட்டோர் ஓராண்டு காலத்துக்குள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவுதல்.
  6. பாதிப்புக்கு ஆளானோர் மீட்கப்பட்டவுடன் பாதுகாப்புடன் வைத்திருத்தல், மறுவாழ்வு அளித்தல். அவர்கள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பாதிக்கப்பட்டதற்கு உதவுவதற்காக  அவர்களுக்கு 30 நாட்களுக்குள் இடைக்கால நிவாரணம் அளித்து உதவுதல். இது தொடர்பாக குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தவுடன் அவர்களுக்கு உரிய நிவாரணத் உதவியை 60 நாட்களுக்குள் அளித்தல்.
  7. குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்றாலும், அதன் முடிவு எவ்வாறாக இருந்தாலும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய மறுவாழ்வு அளிப்பதற்குக் கட்டுப்பாடு ஏதுமில்லை.

மறுவாழ்வு நிதி

  1. பாதிக்கப்பட்டோரின் உடல்நிலை, மனநிலை, சமூகத்தில் மதிப்பை நிலைநாட்டுதல் ஆகியவற்றை மீட்டெடுக்க மறுவாழ்வு நிதியை உருவாக்குதல். கல்வி, தொழில், திறன் மேம்பாடு, உடல் நலம், மன நல ஆதரவு, சட்டப்பூர்வ உதவி, பாதுகாப்பான தங்குமிடம் அளித்தல் ஆகியவற்றுக்கு இது உதவக் கூடும்.
  2. கடத்தல் குற்றங்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்.
  3. இந்த சட்ட முன்வடிவு மாவட்ட, மாநில, தேசிய அளவில் அர்ப்பணிப்புடன் கூடிய அமைப்புகள், நிறுவனங்களை அமைக்கத் துணைபுரியும்.  கடத்தலைத் தடுப்பது, பாதிக்கப்பட்டோரைக் காப்பது, புலன் விசாரணை நடத்துவது, மறுவாழ்வுப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த அமைப்புகளும் நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். தற்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கடத்தல் தடுப்புப் பிரிவின் (National Anti-Trafficking Bureau) பணிகளைத் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தேசிய அளவில் மேற்கொள்ளும்.
  4. இக்குற்றத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ. 1 லட்சத்துக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
  5. இந்தக் குற்றத்தைப் பொறுத்தவரையில் தேசிய அளவிலும் உள்நாட்டிலும் இருக்கும் திட்டமிட்ட சதிவலையை முறியடிக்க குற்றத்துடன் தொடர்புள்ளவர்களின் சொத்துகளை முடக்குவது, பறிமுதல் செய்வது, உள்ளிட்ட கடும் நடவடிக்கைளை மேற்கொள்ளவும் இந்த சட்ட முன்வடிவு வழிவகுக்கும்.
  6. இந்த உத்தேச சட்டமுன்வடிவு நாடு விட்டு நாடு நடத்தப்படும் கடத்தல் குற்றங்களையும் ஒடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வகை செய்யும். இதில், வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்தும், சர்வதேச புலனாய்வில் உதவியும் சர்வதேச  அமைப்புகளுடன் இணைந்தும், இந்த தேசிய கடத்தல் தடுப்புப் பிரிவு (National Anti-Trafficking Bureau) செயல்படும். இக்குற்றம் தொடர்பாக புலன் விசாரணை, நீதி விசாரணை ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக  ஆதாரங்கள், அது தொடர்பான பொருட்கள், சாட்சியங்களை எல்லை கடந்தும் பகிர்ந்து கொள்ளவும் இந்த மசோதா வழியமைக்கும்.

பின்னணி:

ஆள் கடத்தல் என்பது மனித உரிமைகளை மீறும் சம்பவங்களில் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய குற்றமாகும். இந்தக் குற்றத்தைக் கையாண்டு தடுக்க உரிய சட்டம் இதுவரை இல்லை. அதனால், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்ட முன்வடிவு (2018) கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டமுன்வடிவு மிகவும் பரவலாகவும், கண்ணுக்குத் தெரியாமலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடக்கும் ஆள் கடத்தல், குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் குற்றத்தைத் தடுக்கப் பெரிதும் வகை செய்யும்.

இந்தச் சட்டம் கொண்வரப்படும்போது, தெற்காசிய நாடுகளிலேயே இந்தியா ஆள்கடத்தலைத் தடுப்பதில் தலைமைப் பண்பு கொண்ட நாடாகத் திகழும். ஆள் கடத்தல் உலகுக்கே கவலை தருவதாகும். அதிலும் தெற்காசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவற்றில், தற்போது இந்தியா ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்தச் சட்டத்தை இந்தியா செயல்படுத்துவதை ஐநா போதைப் பொருள் கடத்தல் குற்றத் தடுப்பு அலுவலகம் (UNODC), தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு (SAARC) ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

இந்த சட்ட முன்வடிவு பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு வல்லுநர்களைக் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு  ஏராளமான ஆலோசனைகள் வரப்பெற்றன. அவையெல்லாம் இந்த சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. வரைவு மசோதா தில்லி, கோல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 60 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்பட பல தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகு வரைவு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. பல அமைச்சர்களிடையில் இந்த மசோதா குறித்து ஆய்வு நடத்தியும் விவாதிக்கப்பட்டது.

 

****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1522178) வருகையாளர் எண்ணிக்கை : 2528
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati