நிதி அமைச்சகம்

ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்யும் மற்றும் சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018 - என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:24PM by PIB Chennai

முதலீட்டாளர்களின் சேமிப்புகளைப் பாதுப்பதற்கான முக்கியக் கொள்கை முயற்சியாக, பின்வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது : -

 

(a) ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்தல் 2018 சட்ட மசோதா &

(b) சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018

ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்கள்  மசோதா 2018-ஐ தடை செய்வது

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்கள்  மசோதா 2018-ஐ தடை செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத வைப்புத்தொகை பிரச்சினையைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த மசோதா உள்ளது. இதுபோன்ற திட்டங்களை அளிக்கும் கம்பெனிகள் / நிறுவனங்கள், தற்போதைய ஒழுங்குமுறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏழைகள் மற்றும் அப்பாவி மக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை ஏமாற்றிவருகின்றன.

விவரங்கள் :

ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்தல்  மசோதா 2018 மூலமாகச் சட்டவிரோத வைப்புத்தொகை திட்டங்களின் பிரச்சினைகளைப் பின்வரும் வகைகளில் கையாள்வதற்கான விரிவான சட்டம் உருவாக்கப்படும்,

a. ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை செலுத்தப்படுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படும்;

b  ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் தொகை பெறப்படும் திட்டங்களை ஊக்குவிக்கும் அல்லது நடைமுறைப்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்;

c. வைப்புத் தொகை செலுத்தியவர்களுக்கு, பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை;

d. வைப்பு நிதி பெறும் ஒரு நிறுவனம், அதைத் திருப்பி அளிக்கத் தவறினால், வைப்பு நிதி செலுத்தியவர்களுக்குப் பணம் திரும்பக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு மாநில அரசால் உரிய அதிகாரம் பெற்றவர் பணியமர்த்தப்படுதல்;

e. மோசடி செய்யும் நிறுவனத்தின் சொத்துகளைப் பிணையாகப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை உரிய அதிகாரம் பெற்றவருக்கு அளிப்பது;

f. வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்குப் பணம் திரும்ப அளிக்கப்படுவதை மேற்பார்வை செய்யவும், இந்தக் குற்றங்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்கள் உருவாக்கப்படுதல்; மற்றும்

g. ஒழுங்குபடுத்தப்பட்ட வைப்புத்தொகை திட்டங்களை மசோதாவில் பட்டியலிடுவது, இந்தப் பட்டியலை விரிவுபடுத்தவோ சுருக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவும் இதில் இடம் பெறும்.

சிறப்பு அம்சங்கள் :

இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் பின்வரும் வகைகளில் இருக்கும்:

  • ஒழுங்குபடுத்தப்படாத எந்த வைப்புத் தொகை திட்டத்தையும் வைப்பு நிதி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த, செயல்படுத்த, விளம்பரங்கள் செய்ய அல்லது வைப்புத் தொகை பெறுவதைத் தடை செய்யும் விதி இந்த மசோதாவில் உள்ளது. ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களால் வைப்பு நிதியாளர் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்த பிறகு, காலத் தாமதங்களுக்குப் பிறகு சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக, தவறு நடப்பதற்கு முன்பே விழிப்புடன் இருக்கும் வகையில், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் தொகை பெறும் செயல்பாடுகளைத் தடை செய்வது இந்த மசோதாவின் கோட்பாடாக உள்ளது.
  • இந்த மசோதா மூன்று வெவ்வேறு வகையான குற்றங்களைக் காட்டுகிறது. அதாவது, ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை திட்டங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை திட்டங்களில் பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்வது மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத்தொகை திட்டங்கள் தொடர்பாக தவறாகத் தூண்டுதல் செய்வது.
  • இந்தச் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில், கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதங்கள் விதிக்க மசோதா வகை செய்கிறது.
  • இந்தத் திட்டங்களால் சட்டவிரோதமாக வைப்புத் தொகைகள் பெறாத வகையில் பணத்தை திரும்பத் தரச் செய்வதற்குப் போதுமான விதிகள் இந்த மசோதாவில் உள்ளன.
  • வைப்புத் தொகை செலுத்தியவர்களுக்குத் தொகையை திருப்பித் தருவதற்காக நிறுவனத்தின் உடமைகள் / சொத்துக்களைப் பிணையாகப் பறிமுதல் செய்து, அதைப் பணமாக்குவதற்கு உரிய அதிகாரம் பெற்றவருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
  • சொத்துகளைப் பிணையாகப் பறிமுதல் செய்து, வைப்பு நிதி செலுத்தியவர்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தருவதற்கு தெளிவான கால வரையறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • நாட்டில் வைப்புநிதி பெறும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிப்பு மற்றும் பகிர்ந்து கொள்வதற்கு மையமாக்கப்பட்ட ஆன்லைன் தகவல் தொகுப்பு ஒன்றை உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.
  • ``வைப்பு நிதி பெறுபவர்'' மற்றும் ``வைப்பு நிதி'' ஆகியவற்றை இந்த மசோதா முழுமையாக வரையறை செய்கிறது.
  • வைப்பு நிதி பெறுதல் அல்லது வைப்பு நிதி கோரும் வாய்ப்புள்ள அனைத்து நிறுவனங்களும் (தனிநபர்கள் உள்பட) ``வைப்பு நிதி பெறுபவர்'' என்பதில் அடங்கும். சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிறுவனங்கள் நீங்களாக.
  • வைப்பு நிதி பெறுபவர்கள், பொதுமக்களின் வைப்புத் தொகைகளை வரவுகள் என்ற போர்வையில் சேர்த்துவிடாமல் தடுக்கும் வகையிலும், அதேசமயத்தில் ஒரு நிறுவனம் தனது சாதாரண வணிகச் செயல்பாடுகளில் பணம் பெறுவதைத் தடுக்கவோ இடையூறு செய்யும் வகையிலோ இல்லாதவாறு ``வைப்பு நிதி'' என்பது வரையறுக்கப் பட்டுள்ளது.
  • மத்திய அரசின் முழுமையான சட்டம் என்ற வகையில், மாநில சட்டங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியதாக இந்த மசோதா உள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்தும் முதன்மையான பொறுப்பு மாநில அரசுகளுக்கே அளிக்கப்பட்டுள்ளது.

பின்னணி :

அண்மைக் காலங்களில் சட்டவிரோத வைப்புத் தொகை பெறும் திட்டங்களின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால், சட்டவிரோத வைப்புத் தொகை பெறும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு, முழுமையான மத்திய சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று 2016-17 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டங்களால் ஏழைகளும், நிதி பற்றிய விவரம் தெரியாதவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகள் பெரும்பாலும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத வைப்புத் தொகை திட்டங்களின் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான வரைவு மசோதா பொது மக்கள் பார்வைக்கு முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், அது இறுதி செய்யப்பட்டதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் 2017-18 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சீட்டு நிதிகள் (திருத்த) மசோதா 2018-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீட்டு நிறுவனங்களின் முறையான வளர்ச்சிக்கு உதவுவதற்கும், சீட்டு நிறுவன தொழிலில் உள்ள சிக்கல்களை நீக்கவும், மக்களுக்கு மற்ற நிதித் திட்டங்களின் வசதிகள் கிடைப்பதை அதிகரிக்கச் செய்யவும், சீட்டு நிறுவனங்கள் சட்டம், 1982-ல் பின்வரும் திருத்தங்கள் முன்வைக்கப் படுகின்றன:

  • உட்பொதிந்த இயல்பைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையில் சீட்டு நிறுவனங்கள் சட்டம் 1982 விதிகள் 2 (b) மற்றும் 11 (1) -ன் கீழ் சீட்டுத் தொழிலுக்கு "Fraternity Fund" என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. தனிப்பட்ட சட்டத்தின் கீழ்  தடை செய்யப்பட்டுள்ள "Prize Chits" என்பதன் செயல்பாட்டில் இருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது;
  • சீட்டுக் குலுக்கல் நடத்துதல் மற்றும் நடைமுறைகளைப் பதிவு செய்வதற்குக் குறைந்தபட்சம் இரண்டு சந்தாதாரர்கள் ஆஜராகியிருக்க வேண்டும் என்ற விதியை அப்படியே வைத்துள்ள நிலையில், சீட்டின் நிறைவுகால நிலையில் நேரடியாகப் பங்கேற்பது சாத்தியப்படாமல் போகக் கூடும் என்பதால்,  குறைந்தபட்சத் தேவையான இரண்டு சந்தாதாரர்கள் முகவரால் முறையாகப் பதிவு செய்யப்பட்ட விடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்க சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2018 வகை செய்கிறது. செயல்பாடுகளின் பதிவுகளுக்கு அந்தச் சந்தாதாரர்களிடம்  இரண்டு நாட்களுக்குள் முகவர் கையெழுத்து பெற்றிட வேண்டும்;
  • முகவருக்கான கமிஷன் தொகை அதிகபட்ச வரம்பு  5 % என்பதில் இருந்து 7% என்று உயர்த்தப்படுகிறது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கமிஷன் அளவு மாறாமல் இருப்பதாலும், ஆட்கள் மற்றும் இதர செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்டதாலும் இந்த வரம்பு உயர்த்தப்படுகிறது;
  • சந்தாதாரர்களின் நிலுவைக்கு முகவர் பிணைஉரிமை கேட்க அனுமதிக்கப்படுவதுடன், ஏற்கெனவே சீட்டு எடுத்தவர்கள் திருப்பிச் செலுத்தாமல் போவதைத் தடுக்கும் வகையில், அவர்களுக்குச் சீட்டு நிறுவனம் செட் - ஆஃப்  செய்ய அனுமதிப்பது; மற்றும்
  • 1982ல் சட்டம் உருவாக்கப்பட்ட போது இருந்த ஒரு நூறு ரூபாய் செட்  என்பது அர்த்தமற்றதாகிவிட்டதால், அந்தப் பிரிவை நீக்கும் வகையில், சீட்டு நிறுவனங்கள் சட்டம் 1982 பிரிவு 85 (b) திருத்தப்படுகிறது. அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப இதை நிர்ணயிக்கவும் உயர்த்தவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.

 

 

***



(Release ID: 1521187) Visitor Counter : 753


Read this release in: English , Telugu