பிரதமர் அலுவலகம்

ஐதராபாத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக மாநாட்டில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரை

Posted On: 19 FEB 2018 1:25PM by PIB Chennai

சீமாட்டிகளே, கனவான்களே

தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதனை நாஸ்காம், விட்சா, தெலங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

உலகெங்கிலும் இருந்து வந்துள்ள முதலீட்டாளர்கள், புதுமைப் படைப்பாளர்கள், சிந்தனை அமைப்புகள் மற்றும் இதர அக்கறை கொண்டோரின் பரஸ்பர நன்மைக்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. நான் இதில் நேரடியாகப் பங்கேற்க விரும்பினேன். என்ற போதிலும் தகவல் தொழில்நுட்பத் திறன் காரணமாக வெளியில் இருந்தபடியே உங்களிடம் உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் அனைவரையும் வரவேற்கிறேன். ஹைதராபாத்திற்கு வரவேற்கிறேன்.

இந்த மாநாட்டின் போது ஹைதராபாத்தின் துடிப்புள்ள வரலாற்றையும் சுவையான உணவுவகைகளையும் கண்டு, சுவைத்து அறிய உங்களுக்கு நேரம் இருக்குமென நம்புகிறேன். இதன் பலனாக நீங்கள் இந்தியாவின் வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்கம் பெறுவீர்கள் என்பது உறுதி.

இந்தியா மிகத் தொன்மையான, வளமான, பல்திறப்பட்ட பண்பாடுகளின் இருப்பிடம். இவற்றின் ஊடே ஒருமைப்பாடு என்ற மையக் கருத்து பின்னிக் கிடக்கிறது.

சீமாட்டிகளே, கனவான்களே

வசுதைவக் குடும்பகம் எனப்படும், உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கை இந்தியத் தத்துவத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய எமது பாரம்பரியத்தை அது பிரதிபலிக்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தக் கொள்கைக்கு உதவி, வழிநடத்தும் வகையில் தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. இந்தக் கொள்கை இணைப்புகள் தெரியாத ஒருங்கிணைந்த உலகை உருவாக்க எமக்கு உதவுகிறது.

புவியியல் அமைப்பு ரீதியான தூரங்கள் ஒரு பிரச்சனையே அல்ல என்கிற வகையில் சிறந்த எதிர்காலத்திற்காக ஒத்துழைத்து வருகிறோம். இன்றைய நிலையில் இந்தியா அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் புதுமைப் படைப்புகளுக்கு முக்கிய மையமாக உருவாகியுள்ளது.

புதுமை படைக்கும் தொழில் முனைவோரின் எண்ணிக்கை இந்தியாவில் வளர்ந்துவருகிறது. அதே சமயம் தொழில்நுட்பச் சந்தைகளும் இங்கு வளர்ந்துவருகின்றன. உலகின் தொழில்நுட்ப இணக்கம் கொண்ட மக்களில் நாங்களும் இருந்து வந்துள்ளோம். தொடர்ந்து இருப்போம். ஒளியிழை கேபிள்களால் இணைக்கப்பட்ட கிராமங்கள், 121 கோடி கைபேசிகளைக் கொண்டுள்ள 120 கோடி ஆதார் மற்றும் 50 கோடி இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ள நாட்டில் இந்த உணர்வு வளர்ந்து வருவதில் ஆச்சரியம் இல்லை.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கும் அதே சமயம் தொழில்நுட்ப ஆற்றலின் மூலம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற இந்தியா சிறப்பான பகுதிகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் அதிகாரம் பெற்றவர்கள் இடையே டிஜிட்டல் நுணுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளும் அவற்றின் மூலமான டிஜிட்டல் சேவை வழங்குதலும் பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பத்தை இவ்வகையில் முழுமையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சில ஆண்டுகளுக்கு முன் நினைத்துக் கூட பார்க்க முடியாததாக இருந்தது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த முன்னேற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். பொதுமக்கள் நடத்தை மற்றும் நடைமுறைகளில் மாற்றங்கள் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்பது அரசின் முயற்சியாக மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கை முறையாகவே மாறியுள்ளது.

தொழில்நுட்பம் என்பது கணினி மூலமான பவர்பாயின்ட் விளக்கம் என்பதை மீறி மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக மாறி வருகிறது. பல அரசுத் திட்டங்களுக்கு அரசின் அக்கறையும் முயற்சியும் தேவைப்படும் நிலையில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களும் சேர்ந்து விரும்பி உழைப்பதால் வெற்றி பெற்றுள்ளது.

ஜன்தன், ஆதார் மொபைல் என்பதன் திரிவேணி சங்கமமான JAM 32 கோடி ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளை ஆதாருடனும், தொலைபேசிகளுடனும் இணைக்கிறது. இவற்றின் மூலமான பயனாளிகளின் கணக்கில் நேரடியான நிதி செலுத்தும் முறையினால் ரூபாய் 57,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

நாடெங்கும் உள்ள 172 மருத்துவமனைகளில் 2 கோடியே 20 லட்சம் டிஜிட்டல் மருத்துவமனைப் பரிவர்த்தனைகள் நோயாளிகள் வாழ்க்கையில் நல்வாழ்வைக் கொண்டுவந்துள்ளன. நாட்டின் தேசிய கல்வி உதவித் தொகை வரைதளத்தின் இன்று 1 கோடியே 40 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஈநாம் (enam) எனப்படும் ஆன்லைன் விவசாயச் சந்தை அதில் பதிவு செய்துள்ள 6.6 மில்லியன் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க செய்துள்ளது. 470 வேளாண் சந்தைகள் டிஜிட்டல் இணைப்பு பெற்றுள்ளன. பீம்-யு.பி.ஐ. மூலமான டிஜிட்டல் செலுத்துகைகள் 2018 ஜனவரி வரை ரூபாய் 15,000 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.

மூன்று மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த யுமங் செயலி 185 அரசு சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2.8 லட்சம் பொது சேவை மையங்கள் செயல்பட்டு மக்களுக்குப் பல டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் மகளிர் தொழில் முனைவோர். இளைஞர்களின் திறன்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு வடகிழக்கு மாநிலமான இம்பாலில் கோஹிமா நகரம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை பி.பி.ஓ. அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 86 பிரிவுகள் செயல்பட தொடங்கியுள்ளன. விரைவில் மேலும் பல பிரிவுகள் செயல்பட தொடங்கவுள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் டிஜிட்டல் எழுத்தறிவை உறுதி செய்ய பிரதம மந்திரி ஊரக டிஜிட்டல் கல்வியறிவு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த வயது வந்த 60 மில்லியன் பேர் பயன்பெறுவார்கள் இத்திட்டத்தினால் 10 மில்லியன் பேருக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதை அடுத்து 2014 –ல் இந்தியாவில் கைபேசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரண்டு மட்டுமே இருந்த நிலையில் தற்போது உலகில் பெரிய கைபேசி நிறுவனங்கள் உள்ளிட்ட 118 பிரிவுகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.

அரசின் இ-மார்க்கெட்-பிளேஸ் திட்டம் இந்தியாவின் தேசிய கொள்முதல் இணையதளமாக மாறியுள்ளது. இதன் பயனாகச் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் அரசின் கொள்முதல் நடவடிக்கையில் பங்கேற்கப் போட்டியிடுகின்றன. இந்த எளிய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு அரசு கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தியுள்ளது. மேலும் கொள்முதல் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

நேற்று, மும்பை பல்கலைக்கழகத்தில் வாத்வாணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சுயேச்சையான, லாப நோக்கு இல்லாத ஆராய்ச்சி நிறுவனமான இது சமூக நன்மைக்காகச் செயற்கை நுண்ணறிவு என்ற செயல்திட்டத்தில் செயல்படுகிறது.

சில நாட்களுக்கு முன், துபாயில் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றபோது எதிர்கால அருங்காட்சியகம் என்ற கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த கண்காட்சி கருத்துகளின் அடைகாக்கும் இடமாகவும் புதுமைப்படைப்புக்கு ஊக்கச் சக்தியாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்ப முன்னோடிகளுக்கு நான் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களில் சிலர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். இவர்கள் அனைவரும் சிறப்பான, மேலும் வசதியான எதிர்காலத்தை மனித குலத்திற்கு உருவாக்க உழைத்துவருகின்றனர்.

நான்காவது தொழிற்புரட்சியின் நுழைவாயிலில் நாம் தற்போது உள்ளோம். இதனை பொது நலனுக்குப் பயன்படுத்தினால் அதனால் மனிதகுலத்தின் நிலையான வளம் உறுதி செய்யப்படும். நமது புவிக் கோளுக்கு நிலையான எதிர்காலம் உறுதிப்படும். இன்று இந்தியாவில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப உலக மாநாட்டை இந்த கண்ணோட்டத்துடனேயே நான் காண்கிறேன்.

இந்த மாநாட்டின் மையக் கருத்துகள் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கும் வாய்ப்புகள் பற்றித் தெரிவிக்கின்றன. தொகுதிச் சங்கிலி, சாதனங்களின் இன்டர்நெட் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கை மற்றும் பணிகளை வெகுவாகப் பாதிக்கக் கூடியவை எனவே நமது பணியிடங்களில் விரைவாக இவற்றை அமைத்துப் பின்பற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்காலப் பணியிடங்களுக்குக் குடிமக்களை திறன்கொண்டவர்களாக மாற்றுவது மிக முக்கியமானது. இந்தியாவில் இளைஞர்களையும், குழந்தைகளையும் சிறப்பான எதிர்காலத்திற்கெனத் தயாரிப்பதற்கு எனத் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போது உள்ள தொழிலாளர்களை உருவாகிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு மறுதிறன் பயிற்சி வழங்கவேண்டியது அவசியம்.

இந்த மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டவர்களில் சோஃபியா என்ற ரோபோவும் ஒன்று என்பதிலிருந்து நாம் புதிய தொழில்நுட்பங்களின் திறன்களை அறிந்துகொள்ள முடியும்.  அறிவுசார் தானியங்கி காலம் உருவாகிவரும் இன்றைய சூழலில் மாறிவரும் பணி இயல்புகள் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம். இவ்வகையில் எதிர்காலத் திறன்கள் என்ற மேடையை உருவாக்கியுள்ள நாஸ்காம் அமைப்பிற்கு எனது பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.

எட்டு முக்கியத் தொழில்நுட்பங்களை நாஸ்காம் அமைப்பு அடையாளம் கண்டிருப்பதாக நான் அறிய வருகிறேன். அவற்றில் செயற்கை நுண்ணறிவும், மெய்நிகர் உண்மை, ரோபோ அடிப்படை தானியக்கம், சாதனங்களின் இன்டர்நெட் அமைப்பு, பிக் டேட்டா, பகுப்பாய்வு, முப்பரிமாண பிரிண்டிங், கிளவுடு கணினிச் செயல்பாடு சமூக மொபைல் போன்றவை இவற்றில் அடங்கும். உலகெங்கும் மிக அதிக அளவில் தேவைப்படும் ஐந்து தொழில்நுட்பப் பணிகளையும் நாஸ்காம் இனம் கண்டுள்ளது.

எதிர்காலத் திறன்கள் மேடை இந்தியா தனது போட்டியிடும் திறனை பேணிப் பராமரிக்க உதவும் என்பது உறுதி. ஒவ்வொரு வர்த்தகத்தின் மையத்திலும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

வர்த்தக நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியன மிகவும் தேவைப்படும்.

மிக குறுகிய காலத்தில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத் துறையின் பல லட்சக்கணக்கான பிரிவுகளை எவ்வாறு மாற்றி அமைக்கப்போகிறோம்? புதுமை படைத்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் கவனம் செலுத்துவதற்காகத் தொடங்கிடு இந்தியா போன்ற திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்திவருகிறது.

பல்வேறு தொழில் வர்த்தகத் துறைகளில் கட்டுபடியாகும் சிக்கனமான தீர்வுகளைக் காண்பதில் நமது புதிதாகத் தொடங்கப்பட்ட  தொழில் பிரிவுகள் முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறோம்.

அடல் புதுமைப் படைப்புச் செயல்திட்டத்தின் கீழ் நாடெங்கும் பள்ளிகளில் அடல் பற்றவைப்புச் சோதனைக் கூடங்களை உருவாக்கி வருகிறோம். இளையோர் உள்ளங்களில் அறிந்துகொள்ளும்  ஆர்வம் படைப்புத் திறன், கற்பனையை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சீமாட்டிகளே, கனவான்களே,

தகவல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்துவரும் அதே வேளையில் சாதாரண மனிதனின் நலன்களை மனதில் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உலகெங்கிலும் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன். உங்கள் ஆலோசனைகள் நலன் பயப்பவையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.

உலகெங்கும் உள்ள ஏழை மற்றும் வாய்ப்பு வசதிகள் அற்றவர் நலன் காக்க இந்த மாநாட்டு முடிவுகள் பயன்படட்டும்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

*********



(Release ID: 1520997) Visitor Counter : 417


Read this release in: English , Urdu , Telugu