மத்திய அமைச்சரவை

மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 FEB 2018 8:12PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் சேர்க்கப்படுகின்றன.

இதன்படி, கீழ்க்கண்ட மாற்றங்கள் சேர்க்கப்படுகின்றன:

  1. துறைமுகங்களில் பணியாற்றும் ஊழியர்களிலிருந்து துறை ஆணைய வாரியத்தில் சேர்க்கப்படும் தொழிலாளர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டாக அதிகரிக்கப்படுகிறது.
  2. தொழிலாளர்களின் நலனுக்காக சேர்க்கப்படும் உறுப்பினரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவிவகிக்க முடியாது. ஓய்வுபெறும்போது, அதனுடன் வாரிய உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வரும்.
  3. துறைமுக ஆணைய வாரியத்தில் உள்ள தன்னிச்சையான   உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 2-ஆகவும், அதிகபட்சம் 4-ஆகவும் இருக்கும்.
  4. மிகப்பெரும் துறைமுகங்கள் அறக்கட்டளை சட்டம். 1963-ன் கீழ், அறங்காவலர்கள் வாரியத்திலிருந்து எந்தவொரு ஓய்வூதியப் பலன்களையும் பெறும் ஒவ்வொரு நபரும், அதே தேதியிலிருந்து வாரியத்திடமிருந்தும் சமமான பலன்களைப் பெறுவார்கள்.
  5. ஒவ்வொரு மிகப்பெரும் துறைமுகங்கள் வாரியமும், எந்தவொரு மேம்பாடு அல்லது கட்டமைப்பு உருவாக்கம் அல்லது துறைமுக எல்லைக்குள் உருவாக்கத் திட்டமிடுவது மற்றும் நிலவுடமை ஆகியவற்றுக்கு சிறப்பு செயல் திட்டங்களை (specific master plan) உருவாக்க உரிமை உண்டு. இந்த சிறப்பு செயல் திட்டங்கள், எந்தவொரு உள்ளாட்சி அல்லது மாநில அரசு ஒழுங்குமுறைகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையானதாக இருக்கும்.
  6. இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க நிலத்தைப் பயன்படுத்துவோருக்கு உரிமை உண்டு.
  7. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, வாரியம் அல்லது வாரியத்தின் சார்பில் பெறப்படும் அனைத்து பணமும், பொதுக் கணக்கு அல்லது துறைமுகங்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டும். துறைமுகங்களின் கணக்கு என்பது, இந்திய அரசின் நிதியமைச்சகம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, ஏதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது ஏதாவது பட்டியலிடப்பட்ட வங்கியில் அடிக்கடி வாரியத்தால் தொடங்கப்படும் கணக்கு ஆகும்.
  8. குறைதீர் வாரியத்தின் (Adjudicatory Board) தலைமை அதிகாரி மற்றும் உறுப்பினர்களை, தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கும்.
  9. குறைதீர் வாரியத்தின் தலைமை அதிகாரி அல்லது எந்தவொரு உறுப்பினரையும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
  10. விதிவிலக்குப் பிரிவு (saving clause) நீக்கிவைக்கப்படுகிறது. எனவே, மும்பை துறைமுக அறக்கட்டளை சட்டம், 1879 மற்றும் கல்கத்தா துறைமுக அறக்கட்டளை சட்டம் 1890-ன் கீழ் சொத்துக்களை உள்ளாட்சி மதிப்பீடு செய்வதில் மும்பை மற்றும் கொல்கத்தா துறைமுகங்கள் ஏற்கனவே பெற்றுவரும் சலுகைகள் தொடரும்.

*****



(Release ID: 1519813) Visitor Counter : 203


Read this release in: English , Telugu