மத்திய அமைச்சரவை

“வேலைவாய்ப்பு மற்றும் அமைதி மற்றும் மனத் திடத்திற்கான நாகரீகமான வேலை” தொடர்பான பரிந்துரையான சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட புதிய விஷயத்தை (தீர்மான எண்: 205) நாடாளுமன்றத்தின் முன் வைப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது

Posted On: 07 FEB 2018 8:18PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வேலைவாய்ப்பு மற்றும் அமைதி மற்றும் மனத் திடத்திற்கான நாகரீகமான வேலை” தொடர்பான பரிந்துரையான சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட புதிய விஷயத்தை (தீர்மான எண்: 205) நாடாளுமன்றத்தின் முன் வைக்க தனது ஒப்புதலை வழங்கியது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 106வது அமர்வு இந்தப் பரிந்துரையை நிறைவேற்றியிருந்தது. இந்தப் பரிந்துரையை மேற்கொள்வதை அந்த அமர்வின்போது இந்தியாவும் ஆதரித்திருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உறுப்பு நாடுகள் இத்தகைய விஷயங்களை பொருத்தமான அமைப்புகளின் முன்பு (இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நாடாளுமன்றம்) வைக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் முன்பு தகவலுக்காக வைக்கப்படுவதாலும் அதனால் ஏற்றுக் கொள்ளப்படுவதாலும் இந்தியாவிற்கு உடனடியாக எந்தவித பொறுப்பும் உருவாகாது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இத்தகைய தீர்மானங்கள் எந்தவொரு நாட்டையும் கட்டுப்படுத்தாத விஷயங்களாகும். அவை நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் செயல்முறையில் வழிகாட்டு நெறிமுறையாகவே பயன்பட முனைகின்றன.

மோதல்கள், பேரழிவுகள் ஆகிய சூழ்நிலைகளில் உருவாகும் நெருக்கடி நிலைமைகளைப் பொறுத்தவரையில் தடுப்பது, மீட்பது, அமைதி, மனத் திடம் ஆகிய நோக்கங்களுக்காக நாகரீகமான வேலை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இந்த பரிந்துரைகள் வழிகாட்டுகின்றன.

பணியிடத்தில் அடிப்படைக் குறிக்கோள்கள், உரிமைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது, சர்வதேச தொழிலாளர் தரங்கள், குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் நாகரீகமான வேலை தொடர்பான உரிமைகள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

நிலைமையிலிருந்து மீள்வது, மனத் திடத்தை மேம்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலம் நெருக்கடியை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில் சமூகப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வளர்த்தெடுத்து, வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்தப் பரிந்துரை வலியுறுத்துகிறது. அமைதியை வளர்ப்பது, நெருக்கடிகளைத் தவிர்ப்பது, நிலைமைகளிலிருந்து மீள்வது மற்றும் மனத் திடத்தை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றுக்கென ஒழுங்கமைந்த, முழுமையான நடைமுறை உத்திகளை அமலாக்க இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் பல்வேறு வகையான அணுகுமுறைகளை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் நாகரீகமான வேலைக்கான வாய்ப்புகள், சமூக-பொருளாதார ஒழுங்கமைவு ஆகியவற்றின் மூலம் உள்ளூர் அளவிலான பொருளாதார மீட்சியை வளர்த்தெடுப்பது, சமூகப் பாதுகாப்பு, சமூகரீதியாக உள்ளமர்த்தும் ஏற்பாடுகள், நீடித்த வளர்ச்சி, நீடித்து நிற்கும் வகையிலான வணிக நிறுவனங்களை (குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை) உருவாக்குவது, திட்டமிடுதலில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளின் தீவிரமான பங்கேற்பை உறுதிப்படுத்த ஊக்கமளிப்பது, கலந்தாலோசனையை உறுதிப்படுத்துவது, மீட்சி மற்றும் மனத் திடம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை அமலாக்குவது; கண்காணிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த அணுகுமுறை அமைந்திருக்க வேண்டும்.

இந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 205வது எண்ணுள்ள பரிந்துரையானது அனைத்து தொழிலாளர்களுக்கும், அனைத்து வேலை தேடுவோருக்கும், அனைத்து முதலாளிகளுக்கும், மோதல்கள், பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து எழும் நெருக்கடி நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், உடனடி கவனம் செலுத்துவது உள்ளிட்டு நெருக்கடியை எதிர்நோக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் பொருந்துவதாகும்.

***



 



(Release ID: 1519764) Visitor Counter : 191


Read this release in: English , Telugu