மத்திய அமைச்சரவை

“பிரதம மந்திரியின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியுதவி” திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 FEB 2018 8:17PM by PIB Chennai

பிரதம மந்திரியின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியுதவி” (Prime Minister's Research Fellows) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், ஒட்டுமொத்தமாக ரூ.1,650 கோடி செலவில், 2018-19-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தி வருகிறார். புத்தாக்கத்தின் மூலம் மேம்பாட்டை மேற்கொள்வது என்ற கனவை நனவாக்குவதற்கு இந்த நிதியுதவித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தத் திட்டம், 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஐஐஎஸ்சி/ஐஐடி-கள்/என்ஐடி-கள்/ஐஐஎஸ்இஆர்-கள்/ஐஐஐடி-கள் ஆகியவற்றில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத்தில் பி.டெக். அல்லது ஒருங்கிணைந்த எம்.டெக். அல்லது எம்.எஸ்சி படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு படித்து வரும் சிறந்த மாணவர்களுக்கு, ஐஐடி-கள்/ஐஐஎஸ்சி-யில் முனைவர் பட்டம் (PhD)  படிக்க நேரடியாக வாய்ப்பு அளிக்கப்படும். வரையறுக்கப்பட்ட தகுதியைப் பெற்ற மாணவர்கள், பிரதம மந்திரியின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியுதவி திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள தேர்வு நடவடிக்கைகள் மூலம், தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.70,000-மும், மூன்றாவது ஆண்டில் மாதந்தோறும் ரூ.75,000-மும், 4-வது மற்றும் 5-வது ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.80,000-மும் வழங்கப்படும். இதுபோக, தங்களது ஆய்வு அறிக்கையை சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளில் தாக்கல் செய்வதற்காக ஒவ்வொரு மாணவருக்கும், வெளிநாட்டு போக்குவரத்து செலவுக்காக 5 ஆண்டுகளுக்கு சேர்த்து, ரூ.2 லட்சம் ஆராய்ச்சி நிதி வழங்கப்படும். 2018-19-ம் ஆண்டு தொடங்கி, மூன்று ஆண்டுகாலத்தில் அதிகபட்சமாக 3,000 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் தனிப்பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக நாட்டில் உள்ள திறன்வாய்ந்த நபர்களை தேர்வுசெய்யும் நீண்டதூர பயணமாக இந்தத் திட்டம் அமையும். இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, ஒருபுறம் நமது தேசியத் தேவைகளையும், மற்றொருபுறம், நாட்டில் உள்ள உயர்நிலை கல்வி நிறுவனங்களில் தரமான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையையும் சரிசெய்யும்.

*****



(Release ID: 1519753) Visitor Counter : 125


Read this release in: Telugu , English