மத்திய அமைச்சரவை

மக்களவையில் நிலுவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு (திருத்த) மசோதா 2015-யை திரும்பப் பெறவும், வகைப்படுத்துவதற்கான காரணிகளை மாற்றவும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் 2006-ல் திருத்தங்களைக் கொண்டுவரும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 FEB 2018 8:14PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான அடிப்படையை, ஆலை மற்றும் இயந்திரங்கள்/உபகரணங்களில் முதலீடு செய்வது என்பதிலிருந்து ஆண்டு விற்றுமுதல் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும். வகைப்படுத்துவதற்கான விதிகளை வளர்ச்சி அடிப்படையில் மாற்றும். ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அடிப்படையிலான புதிய வரிவிதிப்பு முறைக்கு ஏற்ப அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும்.

தயாரிக்கும் பொருட்கள் மற்றும் அளிக்கும் சேவைகளை ஆண்டு விற்றுமுதல் அடிப்படையில் பிரிவுகளாக (unit) வரையறுப்பதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம், 2006-ன் 7-வது பிரிவில் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்யப்படும்:

  • ஆண்டு விற்றுமுதல் ரூ.5 கோடியைத் தாண்டாத குறு நிறுவனம், ஒரு பிரிவு என்று வரையறுக்கப்படும்.
  • ஆண்டு விற்றுமுதல் ரூ.5 கோடிக்கு அதிகமாகவும், ரூ.75 கோடிக்கும் குறைவாகவும் உள்ள சிறு நிறுவனம், ஒரு பிரிவு என்று வரையறுக்கப்படும்.
  • ஆண்டு விற்றுமுதல் ரூ.75 கோடிக்கு அதிகமாகவும், ரூ.250 கோடிக்கும் குறைவாகவும் உள்ள நடுத்தர நிறுவனம், ஒரு பிரிவு என்று வரையறுக்கப்படும்.
  • கூடுதலாக, மத்திய அரசு அறிவிக்கை மூலம், விற்றுமுதல் வரம்பை அறிவிக்கலாம். இது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தின் 7-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பில் மூன்று மடங்குக்கு மேலாக இருக்கக் கூடாது.

தற்போதைய நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் (பிரிவு 7)-ன் கீழ், உற்பத்திப் பிரிவுகளில் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்படும் முதலீடு, சேவை நிறுவனங்களில் உபகரணங்கள் மீதான முதலீடு அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்படுகின்றன. தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்படும் முதலீட்டு அளவு குறித்து சுயமாக அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தேவைப்பட்டால் ஆய்வுசெய்யப்படுகிறது. இதன் காரணமாக, பரிவர்த்தனை செலவு ஏற்படுகிறது.

விற்றுமுதல் என்ற அடிப்படையை, கிடைக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த மதிப்பீடுகள் மூலம் உறுதிப்படுத்தலாம். உதாரணமாக, ஜிஎஸ்டி இணையம் மற்றும் பிற வழிமுறைகள். இதன்மூலம், விருப்பப்படியான செயல்பாடுகள் இருக்காது, வெளிப்படைத்தன்மை மற்றும் இலக்கு அடிப்படையில் இருக்கும். ஆய்வுசெய்ய வேண்டிய தேவையை நீக்கிவிடும். வகைப்படுத்துதல் முறையை முற்போக்குத்தனமாகவும், புரட்சிகரமாகவும் வைத்திருக்கும். ஆலைகள் மற்றும் இயந்திரங்கள்/உபகரணங்கள் மீதான முதலீடு அடிப்படையில் வகைப்படுத்துவதால் ஏற்படும் நிலையற்ற தன்மையை எதிர்கொள்ள உதவும். வேலைவாய்ப்பை அளிக்கும். எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தும். அதோடு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மீண்டும் மேற்கொள்ளாமலேயே, பொருளாதார சூழலுக்கு ஏற்ப குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதை அரசே எளிதில் மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்யும்.

வகைப்படுத்துவதற்கான விதிகளை மாற்றுவதன் மூலம், எளிதாக தொழில் செய்வது மேம்படும். இதன் பயனாக, வளர்ச்சி ஏற்படும். நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழிவகை செய்யும்.

*****

 



 



(Release ID: 1519752) Visitor Counter : 198


Read this release in: English , Telugu