பிரதமர் அலுவலகம்

ஊட்டச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சீராய்வு செய்தார் பிரதமர்

Posted On: 25 NOV 2017 11:55AM by PIB Chennai

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கவும், தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சீராய்வு செய்தார். இந்த உயர்மட்ட சீராய்வுக் கூட்டத்தில் பிரதமர் அலுவலகம், நிதிஆயோக் மற்றும் பிற அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளின் தற்போதைய நிலை குறித்து சீராய்வு செய்யப்பட்டது. ஊட்டச்சத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மற்ற சில வளரும் நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, பிறக்கும்போது குறைந்த எடையில் இருத்தல், ரத்த சோகை போன்றவற்றை கட்டுப்படுத்தும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022-ம் ஆண்டில் சரியான பலன் கிடைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த சீராய்வுக் கூட்டத்தில், ஊட்டச்சத்து மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக அதனை உடனுக்குடன் ஆய்வுசெய்வது குறித்து, குறிப்பாக மிகவும் மோசமாக செயல்படும் மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த அதிகாரிகள், தூய்மை இந்தியா திட்டம், இந்திராதனுஷ் இயக்கம், பெண் குழந்தையை பாதுகாப்போம் – பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், மகப்பேறு காலத்தில் பயனளிக்கும் பிரதமரின் மாட்ரு வந்தனா திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களால், ஊட்டச்சத்து விவகாரத்தில் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதாக அடிக்கடி குறிப்பிட்டனர். இந்த சூழலில், ஊட்டச்சத்து விவகாரத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக பயனளிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

நாம் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த அமைப்புசாரா வழிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
 

***



(Release ID: 1510930) Visitor Counter : 252


Read this release in: English , Gujarati , Kannada