Posted On:
                16 NOV 2017 3:53PM by PIB Chennai
                
                
                
நீதித்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
மத்திய அரசின் நிதியுதவியுடன் நீதித்துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குப் பிறகும்,  அதாவது 01.04.2017 முதல் 31.03.2020 வரை, தொடர்வதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது அனுமதியை வழங்கியது.  ரூ. 3,320 கோடி மதிப்பீடு கொண்ட இத்திட்டத்தை அதற்குரிய ஒதுக்கீட்டுடன் நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான தேசிய இயக்கத்தின் மூலம் குறிப்பிட்ட இலக்கை நோக்கிய வகையில் அமல்படுத்தவும் அது தனது ஒப்புதலை வழங்கியது. 
தற்போது கட்டுமான நிலையில் உள்ள நீதிமன்ற மன்றங்கள், குடியிருப்புகள், அதன் முன்னேற்றம், நிறைவு ஆகியவை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கவும், அதைப் போன்றே, எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் இத்திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள நீதிமன்ற மன்றங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கான சிறந்த சொத்து மேலாண்மை, நெறிமுறைகள் மற்றும் விவரக் குறியீடுகள் ஆகியவற்றை உருவாக்குவது போன்றவற்றுக்கென புவியியல் ரீதியான பின்தொடர்தலின் மூலம் இணைய வழி கண்காணிப்பு முறையை  நீதித் துறை உருவாக்குவதற்கும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
இத்திட்டத்தினால் கிடைக்கப்பெறும் பயன்கள்:
இத்திட்டம் மாவட்ட, சார் மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிராமப் பஞ்சாயத்து மற்றும் கிராம மட்டங்கள் உள்ளிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தமான நீதிமன்ற மன்றங்கள், நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுவதை அதிகரிக்கச் செய்யும். நீதித்துறை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதன் மூலம் நாடு முழுவதிலும் அதன் செயல்பாடு, செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தவும் இது உதவும்.
நிதியுதவி:
மாவட்ட, சார் மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கான குடியிருப்புகள், நீதிமன்ற மன்றங்கள் ஆகியவற்றை கட்டுவதற்கென நீதித்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதிஉதவியுடன் செயல்படும் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள்/ துணை நிலை மாநில நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதிப்பங்கீட்டைப் பொறுத்தவரை இந்தியாவின் வடகிழக்கு மற்றும் இமய மலைப் பகுதி மாநிலங்கள் தவிர்த்த இதர மாநிலங்களில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமாகவும் மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகவும் இருக்கும்; இந்தியாவின் வடகிழக்கு மற்றும் இமய மைலைப் பகுதி மாநிலங்களுக்கு இது 90:10 சதவீதமாக இருக்கும். மத்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் வரும் துணைநிலை மாநிலப் பகுதிகளைப் பொறுத்தவரை இது 100 சதவீத நிதியுதவியாக இருக்கும். மாவட்ட, சார் மாவட்ட நீதிமன்றங்களுக்கென 3,000 நீதிமன்ற மன்றங்களையும், நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கென 1,800 குடியிருப்புகளையும் கட்டுவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது செயலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவடையவும் இது உதவி செய்யும்.
திட்ட மேற்பார்வை
தற்போது கட்டப்பட்டு வரும் நீதிமன்ற மன்றங்கள், குடியிருப்புகளுக்கான வேலைகள் நிறைவு பெறுவது, அதன் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மட்டுமின்றி சிறந்த சொத்து மேலாண்மையை பின்பற்ற உதவும் வகையிலும் இது குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கு நீதித்துறையினால் இணைய வழி மேற்பார்வை முறை உருவாக்கப்படும்.
     இந்தக் கட்டுமானப் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடப்பதை  உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் மாநில தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதோடு, அவை தொடர்ந்து கூடவும் வேண்டும். மத்திய அரசினால் வழங்கப்பட்ட நிதி,  தாமதமின்றி உடனடியாக பொதுப்பணித்துறைக்கு மாநில அரசினால் வழங்கப்படுவதையும் இந்தக் குழு மேற்பார்வையிட வேண்டும்.
பின்னணி:
நீதித்துறைக்கான கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கென மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களின் மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் இத்திட்டம் 1993-94 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட, சார் மாவட்ட நீதிமன்றங்களுக்கான மன்றங்கள், நீதித்துறை அதிகாரிகள், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை கட்டுவதற்கான திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கும், துணைநிலை மாநிலங்களுக்கும் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
*****