சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மோடி 3.0 அரசின் முதல் 100 நாளில் தமிழக திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி
Posted On:
19 SEP 2024 5:52PM by PIB Chennai
செமிகண்டக்டர் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்து நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது அரசின் முதல் 100 நாள் சாதனைகள் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த மகத்தான சாதனைகள், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாட்டை அழைத்து செல்வதாக திரு எல் முருகன் கூறினார். 100 நாட்களுக்குள், உள்கட்டமைப்பு, விவசாயம், பெண்கள் மேம்பாடு, பழங்குடியினர் நலன், பட்டியல் சமூகத்தினர் நலன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக ரூ .15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயத்தை வலுப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
குறிப்பாக, இந்த 100 நாட்களில் உள்கட்டமைப்பில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கான "குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி)5% முதல் 12.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதுதவிர,பிரதமர்-கிசான்திட்டத்தின் 17 வது தவணையாக 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது" என்று திரு முருகன் எடுத்துரைத்தார். மேலும், இந்த முதல் 100 நாட்களில் நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மைல்கற்கள்: வந்தே பாரத் ரயில்கள், துறைமுக முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்நாட்டில், இந்த 100 நாட்களுக்குள், சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும், மதுரையிலிருந்து பெங்களூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்களுக்குப் பிரதமர் அனுமதி அளித்துத் தொடங்கி வைத்துள்ளதாக டாக்டர் எல் முருகன் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி துறைமுகத்தில், 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் ரூ. 7,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
11 புதிய நகரங்கள் பண்பலை வானொலி விரிவாக்கத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறைக்கடத்தி இயக்கத்தில் (செமிகண்டக்டர் மிஷன்) தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்து, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மீன்வளத்துறையில், புதிய நீர்வாழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
100 நாட்களில் நடைபெற்றுள்ள இந்த சாதனைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளில் விரைவான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் தெரிவித்தார்.
****************
(Release ID: 2056742)
Visitor Counter : 41