• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்

Posted On: 27 FEB 2024 2:56PM by PIB Chennai

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக, சென்னையில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மிகவும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்திலிருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரிவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் 45-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கு ரூ. 16,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ. 93,671 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் ரூ.35,247 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன அவர் தெரிவித்தார்.

  

கடந்த 10 ஆண்டுகளில், மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னிலிருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கப்பலின் செயல்பாட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ், குந்துகால், பூம்புகார், சின்னமுட்டம், மூக்கையூர் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகத் திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் துறையில் புதுமைகளுக்காக சென்னை ஐஐடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை (28 பிப்ரவரி 2024) பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக அவர் கூறினார். மேலும் இது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் தெரிவித்தார்.

10,324 கோடி மதிப்பிலான 30 திட்டங்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றும், இவற்றில் ரூ.7,587 கோடி மதிப்பிலான 6 திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு துறைமுகங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்

சில ஆண்டுகளுக்கு, நமது பிரதமர், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார் எனவும் அது நாளை நிறைவேறப் போகிறது என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதம் நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 7056 கோடி செலவில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டம் உருவாக்கப்படும் எனவும் இதன் மூலம் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் இந்தத் துறைமுகத்தின் கொள்கலன் திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் மாநிலத்தின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தும் என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.

மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், துறையின் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன், இணைச் செயலாளர் திரு பூஷன் குமார், சென்னை காமராஜர் துறைமுகத்தின் மேலாண் இயக்குநர் திருமதி ஐரின் சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

 

   

*********

ANU/AD/PLM/RS/KV



(Release ID: 2009369) Visitor Counter : 94


Link mygov.in