• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது


மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்

Posted On: 13 DEC 2023 3:36PM by PIB Chennai

தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் திரு ஜி.செல்வம், திரு தனுஷ் எம்.குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். இதே போல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,57,672 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2023 டிசம்பர் 6 நிலவரப்படி 5,83,813 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் 39 லட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 2,71,775 பேர் பயிற்சி பெற்று 2 லட்சத்து 47 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவலையும் அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 691 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022 - 2023 நிதியாண்டில் 19 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டம் – 2.0 மூலம் தமிழ்நாட்டில் 2021 – 2022 நிதியாண்டிலிருந்து 2023 – 2024 நிதியாண்டின் பாதி காலம் வரை 14ஆயிரத்து 146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

2022 – 2023 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட / செலவிடப்பட்ட நிதி விவரம்:

வ. எண்

திட்டத்தின் பெயர்

ஒதுக்கீடு
(ரூ.கோடியில்)

1.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

11,420.93 (மாநில அரசின் பங்கு உட்பட)

2.

பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டம்

22,90.47

3.

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம்

532.36 மாநில அரசின் பங்கு உட்பட)

4.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்

381.57

5.

ஊரக மேம்பாட்டுத் திட்டம்

57.54

6.

ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்

5.54

7.

தேசிய சமூக உதவித் திட்டம்

57,878.86

8.

பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம்

42.955

 

மத்திய அரசின் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களில் அனைவரையும் பயனடையச் செய்வதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மத்திய அரசு திட்டங்களின் பயனை பெறுவதில் எவரும் விடுபட்டு விடக் கூடாது என்பது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.

***

AD/SMB/RR/KPG



(Release ID: 1985816) Visitor Counter : 73


Link mygov.in