• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மூன்றாம் கட்ட இளையோர் சங்கத்தில் ராஜஸ்தான் பிரதிநிதிகள் தமிழ்நாட்டைக் கண்டுகளித்தனர்

Posted On: 29 NOV 2023 5:24PM by PIB Chennai

இளையோர் சங்கம் என்பது ஒரே பாரதம், உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். இந்த தனித்துவமான கலாச்சார திட்டம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவின் இளைஞர்களிடையே புரிதலையும், ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் இளையோர் சங்கத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு விருந்தளிக்கிறது. நவம்பர் 24 முதல் டிசம்பர் 4 வரை, ராஜஸ்தான் தூதுக்குழுவின் பயணத் திட்டம் என்பது கலாச்சார, வரலாற்று மற்றும் கல்வி ஆய்வுகளின் தொகுக்கப்பட்ட கலவையாகும்.

நவம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானின் கோட்டாவில் இருந்து பயணத்தைத் தொடங்கிய பிரதிநிதிகள், நவம்பர் 24-ம் தேதி திருச்சி வந்தடைந்தனர். அவர்களை திருச்சி ஐ.ஐ.எம்., அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். தமிழகத்தின் வளமான பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில், திருச்சி ஐ.ஐ.எம்.-ல் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய அரசின் நிதி அமைச்சக வருமான வரி கூடுதல் ஆணையர் திருமதி. டி.நித்யா கலந்துகொண்டார்.

இரண்டாம் நாளன்று, ராஜஸ்தான் பிரதிநிதிகள் சிலம்பாட்டம், கபடி, உறியடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்றனர். அன்றைய தினம் ஆசிரியர் கலந்துரையாடல்கள், வளாகச் சுற்றுலா மற்றும் திருச்சிராப்பள்ளி ஐ.ஐ.எம்.-ல் வழக்கமான வாழை இலையுடன் மதிய உணவு ஆகியவை இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணை ஆகிய இடங்களுக்கு சென்று வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று அதிசயங்களைப் பார்வையிட்டனர்.

3-ம் நாளன்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். புகழ்பெற்ற பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்கரை, வரலாற்று சிறப்புமிக்க ராமேஸ்வரம் கோயில் ஆகியவற்றை அவர்கள் கண்டுகளித்தனர்.

4-ம் நாளில் கீழடி தொல்லியல் தளம், மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்ட பிரதிநிதிகள் சங்க கால குடியேற்றம் மற்றும் மகாத்மா காந்தியின் நீடித்த பாரம்பரியம் குறித்து அறிந்து கொண்டனர்.

5-ம் நாள், திருச்சிராப்பள்ளியில் உள்ள உயர் ஆற்றல் எறிகணைத் தொழிற்சாலைக்கு (ஹெச்.இ.பி.எஃப்) சென்றனர். தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற மாணவர்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

வரும் நாட்களில், தஞ்சாவூர் பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில், மகாபலிபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடுகின்றனர். தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) ஆகிய இடங்களுக்குக் கல்வி சுற்றுலா செல்லவுள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரையும் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுகின்றனர்.

இந்த செழுமையான அனுபவங்களை எளிதாக்குவதிலும், ராஜஸ்தான் மற்றும் தமிழக இளைஞர்களிடையே தொடர்புகளை வளர்ப்பதிலும் திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

***

ANU/SMB/IR/RR/KPG


(Release ID: 1980835) Visitor Counter : 59


Link mygov.in