• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக வளாகம் திறப்பு

Posted On: 27 SEP 2023 4:17PM by PIB Chennai

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. முருகம்பாக்கம் மகாலட்சுமி நகரில் உள்ள புதுச்சேரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல்கலை தொழில்நுட்ப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தை துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன்   இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு பிமல் என் பட்டேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் திரு என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் திரு என். ரங்கசாமி, அனைவருக்கும் கல்வி அளிக்கும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது என்று கூறினார். புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை கண்டுபிடிக்க சிரமங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அதுபோன்ற குற்றங்களை தடுக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அவசியம் என்று கூறினார். புதிய குற்றங்களை கண்டுபிடிக்க துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் அவசியம் என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சகம் இந்தப் பல்கலைக்கழகத்தை பல மாநிலங்களில் தொடங்கி, புதுச்சேரியிலும் அதன் கிளையை அமைத்திருப்பது புதுச்சேரி மீது மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன், இந்தப் பல்கலைக்கழகம் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும், இதன் முதல் பட்டமளிப்பு விழாவில், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் கூறினார். இந்தப் பல்கலைக்கழகத்தில் பயில்வதன் மூலம் இளைஞர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என குறிப்பிட்ட அவர், அதனால் தான் பல்கலைக்கழகத்திற்கு இடம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அனைவரும் இணைந்து பணியாற்றினால் முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கு புதுச்சேரி ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் பல மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. விழாவில் தலைமைச் செயலர் திரு ராஜீவ்வர்மா, உதவி இயக்குநர் திரு அர்ஷ், பல்கலைக்கழக முதல்வர்  திரு விஜய்நம்பி, காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

***

AD/IR/RS/KPG

 



(Release ID: 1961281) Visitor Counter : 108


Link mygov.in