• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும்-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஷ்ரவன் குமார் ஜடாவத் வலியுறுத்தல்

Posted On: 13 JUN 2023 3:21PM by PIB Chennai

மாநில அரசும் மத்திய அரசும் மக்களின் மேம்பாட்டுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையானதாக அமையும். தற்காலத்தில் நுகர்வுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உடனடியாக தேவை இல்லாத பொருட்களை வேண்டாம் என்று சொல்லும் மனப்பான்மை வேண்டும். நாளைய தலைமுறைக்கு பூமியை வாழத்தக்கதாக ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய பொருட்களை தவிர்க்க வேண்டும். தேவை குறையும்போது உற்பத்தி தானாகவே குறைந்துவிடும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் இன்று கள்ளக்குறிச்சியில் நடத்திய நான்கு நாட்கள் புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசும் போது ஆட்சித்தலைவர்
திரு ஷ்ரவன் குமார் ஜடாவத் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் நலத் திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை ஆகிய மையக் கருத்துகளில் புகைப்படக் கண்காட்சி சண்முகா மஹாலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

நிகழ்ச்சிக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா.அண்ணாதுரை தலைமையுரை ஆற்றினார். எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை இன்று உள்ளது. பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மட்டும் அல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.  சுற்றுச் சூழலை நமது நடவடிக்கைகள் பாதிக்கின்றன. சுற்றுச் சூழல் சீர்கேட்டால் இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கின்றன. எனவே இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று திரு அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாக இயக்குநர் டாக்டர் எஸ்.நந்தகுமார் புஜம் சிறப்புரை ஆற்றினார்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சு.ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு ச.செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமிகு.தீபிகா, தாட்கோ மேலாளர் திரு.ஆனந்த மோகன்,  இம்ப்காப்ஸ் இயக்குநர் டாக்டர் டி.பாஸ்கரன், அரியலூர் குருஜி ருத்ர சாந்தி யோகாலயா அமைப்பாளர் திரு ப.கிருஷ்ணகுமார் ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் யோகா குறித்த துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வெளியிட்டார். ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஷ்ரவன் குமார் ஜடாவத் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதார் அட்டை திருத்த அரங்கு, சிறுதானிய ஊட்டச்சத்து அரங்கு, மருத்துவ மூலிகைகள் அரங்கு, சமூக நலத் துறை அரங்கு, காசநோய் அரங்கு, மகளிர் திட்ட சுய உதவிக் குழுக்களின் அரங்கு ஆகியன அமைக்கப்பட்டு இருந்தன. இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.

முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் திரு தி.சிவக்குமார் வரவேற்பரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவி அலுவலர் திரு.சு.வீரமணி நன்றி கூறினார்.

    

***


(Release ID: 1931950) Visitor Counter : 103


Link mygov.in