சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் மனதின் குரல் 100-வது அத்தியாயம்: ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடு
Posted On:
29 APR 2023 7:38PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலமாக தமது கருத்துகளை நாட்டு மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் நாளை (30.04.2023) ஒலிபரப்பாக உள்ளதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்று அந்த உரையைக் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் திரு நரேநே்திர மோடி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் தேசத்துக்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து மிக விரிவாகப் பேசி வருகிறார். இதில் அதிகமுறை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். அது மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக அதிக அளவில் தமது கருத்துகளைப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது 100-வது அத்தியாயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசவுள்ள நிலையில், அதனைப் பெரிய அளவில் கொண்டாடி பிரபலப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் திரு ஆர்.என். ரவியுடன் இணைந்து பல்வேறு துறை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் பிரதமரின் மனதின் குரல் உரையை நேரலையில் கேட்கவுள்ளனர். அங்கு பெரிய திரை அமைக்கப்பட்டு அதில் பிரதமரின் உரை திரையிடப்படவுள்ளது.
பிரசார் பாரதி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10.30 க்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்க பல்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டுப் பேசிய நபர்களும் ஆளுநர் மாளிகையில் 100-வது அத்தியாயத்தைக் கேட்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரியிலும், பிரதமரின் மனதின் குரல் உரையின் 100-வது அத்தியாதத்தைக் கேட்க துணை நிலை ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து பிரதமரின் உரையைக் கேட்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
***
AP/PLM/DL
(Release ID: 1920792)
Visitor Counter : 136