இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2026 6:27PM by PIB Chennai
நிதிச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்தார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ சார்பிலான வட இந்திய மண்டலக் குழுவின் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
கணக்கியல், தணிக்கை, நிதி மேலாண்மை ஆகியவற்றுடன் பட்டயக் கணக்காளர்களின் பணி முடிந்துவிடுவதில்லை என்று அவர் கூறினார். அவர்களின் பகுப்பாய்வுத் திறன், நேர்மை, ஆலோசனைகள் ஆகியவை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகிப்பது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, மின்னணுத் தளங்கள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை நிதிச் சேவைகளிலும் வணிகச் செயல்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். இவற்றைப் பட்டயக் கணக்காளர்கள் பயன்படுத்தி தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும், நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை வளர்ச்சியடைவதில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343516®=3&lang=1&_gl=1
****
SS/PLM/RJ