இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 7:03PM by PIB Chennai
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் இணைந்து, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ‘நவ்யா 2.0’ திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். உத்தராகண்ட் சமஸ்கிருத நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இளம்பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
நவ்யா 2.0 திட்டம், நாடு முழுவதும் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். குறிப்பாக வளர்ச்சியில் பின்தங்கிய, எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெறுவதற்கான வயது வரம்பு 16 முதல் 25 வயது வரை ஆகும்.
புதிய தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இதில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு, தொழில்பழகுநர் பயிற்சி அல்லது சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் என்றார். பெண்கள் வளர்ச்சியின் பயனாளிகளாக மட்டும் இருக்கக் கூடாது எனவும் வளர்ச்சியை வழிநடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு பெண்ணும் பயிற்சி பெற்று பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி காணொலி மூலம் பேசுகையில், பயிற்சிக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளே ஒரு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்றார். இளம்பெண்கள் புதிய வேலைகளைத் தேர்வு செய்யவும், தொழில்பழகுநர் பயிற்சி பெறவும், சொந்தத் தொழில் தொடங்கவும் நவ்யா 2.0 உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முந்தைய சோதனை முயற்சியில், வளரிளம் பெண்களுக்கு ட்ரோன் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக புதிய துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343144®=3&lang=1
****
SK/PLM/RJ