இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 6:09PM by PIB Chennai
ஜல் ஜீவன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவுபடுத்துதல், கிராமப்புற குடிநீர் அமைப்புகளை நீண்டகாலம் சிறப்பாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற இரண்டாவது மண்டல மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று (27.11.2026) நிறைவடைந்தது.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறை ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டில், ஏழு வட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிறைவு நிகழ்ச்சியில் பேசிய குடிநீர், துப்புரவுத் துறைச் செயலர் திரு அசோக் கே.கே. மீனா, குடிநீர் கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமே போதாது என்றும், அவற்றை முறையாகப் பராமரிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார். கிராமப் பஞ்சாயத்துகள், உள்ளூர் மக்கள் ஆகியோர் குடிநீர் திட்டங்களின் உரிமையையும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் சூரியசக்தி மூலம் குடிநீர் விநியோகம் செய்தல், நவீன கண்காணிப்பு அமைப்புகள் மூலம் குடிநீர் கட்டமைப்புகளை இயக்குதல் போன்ற சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து குடிநீர் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்க வேண்டும் என ஜல்ஜீவன் இயக்கத்தின் இயக்குநர் திரு கமல் கிஷோர் சோன் வலியுறுத்தினார்.
ஐந்து கிராமங்களில் நடைபெற்ற கள ஆய்வுகளின்போது, குடிநீரின் தரத்தைப் பரிசோதித்தல், குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. வீடுகளுக்குச் சென்று குழாய்களில் வந்த தண்ணீரைச் சோதித்து அதன் தரத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கிராம மக்களின் பங்கேற்பு, நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், முறையான பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் நிலையான குடிநீர் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342708®=3&lang=1
(Release ID : 2342708)
****
SK/PLM/SH