இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 6:04PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட 'விந்தியகிரி' என்ற அதிநவீன போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனத்தில் இன்று (2026 நவம்பர் 27) இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏழாவது, இறுதிப் போர்க்கப்பல் இதுவாகும். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஏழு போர்க்கப்பல்களும் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள விந்தியகிரி மலைத்தொடரின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே பெயரில் செயல்பட்ட போர்க்கப்பல், 1981 ஜூலை 8 முதல் 2012 ஜூன் 11 வரை 31 ஆண்டுகள் இந்தியக் கடற்படையில் சேவையாற்றியது.
புதிய விந்தியகிரி கப்பலில் நவீன ஆயுதங்கள், கண்காணிப்புக் கருவிகள், எதிரிகளிடம் எளிதில் சிக்காத வகையிலான தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எதிரிக் கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை வலுவாக எதிர்கொள்ளும் திறன் கொண்டது இந்தக் கப்பல்.
இந்த வரிசையில் முதல் கப்பலை உருவாக்க 84 மாதங்கள் ஆன நிலையில், விந்தியகிரி கப்பல் 68 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதல் கப்பல் ஒப்படைக்கப்பட்ட 23 மாதங்களுக்குள் ஏழு கப்பல்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் 75 சதவீத உள்நாட்டுப் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் சுமார் 4,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 10,000-க்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவின் தற்சார்பு போர்க்கப்பல் தயாரிப்புத் திறனில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342700®=3&lang=1
(Release ID: 2342700)
****
SK/PLM/SH