இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 3:43PM by PIB Chennai
பழங்குடியின மாணவர்கள் சர்வதேச அளவில் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் 1954-55-ம் ஆண்டு முதல் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 புதிய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதில் 30% இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2026-27-ம் கல்வியாண்டு முதல், கியூஎஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் 1,000 இடங்களுக்குள் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டப் பயனாளிகளில் பெண்களின் பங்கு, 2015-16-ம் ஆண்டில் 20%-ல் இருந்து, 2024-25-ம் ஆண்டில் 47.8% ஆக உயர்ந்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 10 இடங்களும், மேலாண்மை, பொருளாதாரம், நிதி, சட்டம் ஆகிய பிரிவுகளுக்கு 4 இடங்களும், வேளாண்மை, மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு 4 இடங்களும், கலை, சமூக அறிவியல், நுண்கலைகள் ஆகிய பிரிவுகளுக்கு 2 இடங்களும் என மொத்தம் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 17 இடங்கள் பழங்குடியின மாணவர்களுக்கும், 3 இடங்கள் மிகவும் பின்தங்கிய பழங்குடியினப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிப் படிப்பிற்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளும், முதுநிலைப் படிப்பிற்கு 1 அல்லது 2 ஆண்டுகளும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஆண்டின் ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி, முதுநிலைப் படிப்பிற்கு 32 வயதுக்கு மிகாமலும், ஆராய்ச்சிப் படிப்பிற்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் (அனைத்து வருவாய் ஆதாரங்களிலிருந்தும்) ரூ.6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு, ஒருமுறை மட்டுமே இச்சலுகை வழங்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் பிரத்யேக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 15,400 அமெரிக்க டாலரும், பிரிட்டனில் பயிலும் மாணவர்களுக்கு 9,900 பிரிட்டிஷ் பவுண்டும் பராமரிப்புப் படியாக வழங்கப்படுகிறது. இது தவிர புத்தகங்கள், ஆய்வு உபகரணங்களுக்கான செலவினப் படி, முழுக் கல்விக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவக் காப்பீட்டுத் தொகை, இந்தியாவிலிருந்து கல்வி நிறுவனத்திற்குச் சென்று வருவதற்கான விமானக் கட்டணம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2015-16-ம் ஆண்டில் ரூ.0.39 கோடியிலிருந்து, 2025-26-ம் ஆண்டில் ரூ.8.00 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.46.46 கோடி விடுவிக்கப்பட்டு, 400 பழங்குடியின மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பழங்குடியின இளைஞர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்திட்டம் பெரிதும் துணைபுரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342523=3&lang=1
****
SS/PD/SH