இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 4:59PM by PIB Chennai
நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் பல்லுயிர் பாதுகாப்பு, உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அணுகல், பயன் பகிர்வு முறையின் (ஏபிஎஸ்) கீழ், தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.13.76 கோடி நிதியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.63.03 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு, 234 தாவர இனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தியதற்காக ஆயுஷ் தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்திய பங்களிப்பிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தை, வியாபாரக் கட்டமைப்புகள் மூலம் உயிரியல் வளங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால் தனிப்பட்ட பயனாளிகளைக் கண்டறிவது கடினமாக இருந்தது. எனவே, மாநிலங்களின் வனப்பரப்பு, மருத்துவத் தாவரங்களின் இயற்கையான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய பல்லுயிர் ஆணையம் இந்த நிதியைப் பகிர்ந்தளித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட 234 தாவர இனங்களில் மிளகு, நெல்லி, அஸ்வகந்தா, கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, சர்ப்பகந்தா, நிலவேம்பு, குங்கிலியம், நெருஞ்சி, ஓரிலைத்தாமரை ஆகிய 10 அதிக தேவை கொண்ட மருத்துவத் தாவரங்கள் மூலம் மட்டும் ரூ.6.45 கோடி பயன் பகிர்வு நிதி கிடைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில பல்லுயிர் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிதி, பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும், மக்கள் பல்லுயிர் பதிவேடுகளைப் புதுப்பிக்கவும், பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தவும், பல்லுயிர் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் உதவும். இந்த முன்முயற்சிகள் தேசிய ஆயுஷ் இயக்கம், தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியத் திட்டங்கள், பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களுக்கு வலுசேர்க்கின்றன.
தேசிய அளவில் இதுவரை அணுகல், பயன் பகிர்வு கட்டமைப்பின் கீழ் ரூ.278 கோடி நிதி பெறப்பட்டு, சுமார் ரூ.218.86 கோடி பல்லுயிர் பாதுகாப்புக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இது குன்மிங்-மாண்ட்ரீயல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் 13-வது இலக்கு, பல்லுயிர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யெரெவன் செயல்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
***
SS/PD/SU