இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 9:39PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், 26 நவம்பர் 2026 அன்று, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஏ.வி.என் நகர்-41/1A1B என்ற முகவரியில் அமைந்துள்ள, மவுண்ட் அக்வா (Mount Aqua) என்ற பிராண்ட் பெயரில் பேக்கேஜ்டு குடிநீரைத் தயாரித்து விற்பனை செய்து வரும் ஏ.வி.என் ட்ரடேர்ஸ் (AVN Traders) நிறுவனத்தில் அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பேக்கேஜ்டு குடிநீர் கேன், பாட்டில் மற்றும் அவற்றின் லேபிள்களில் BIS தரநிலை முத்திரையை (ISI Mark) அங்கீகாரமின்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விதிமீறல் தொடர்பாக, இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் (BIS Act 2016) பிரிவு 17(3)-ஐ மீறியதற்காக, அச்சட்டத்தின் பிரிவு 28-ன் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, 16 நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன்கள் (பேக்கேஜ்டு குடிநீர்), 144 நிரப்பப்பட்ட 2 லிட்டர் பேக்கேஜ்டு குடிநீர் பாட்டில்கள், செல்லுபடியாகாத BIS தரநிலை முத்திரை (ISI Mark) பொறிக்கப்பட்ட சுமார் 1,10,000 லேபிள்கள் / ஒட்டுச்சீட்டுகள் மற்றும் சுமார் 175 காலியான 20 லிட்டர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தயாரிப்புகள், லேபிள்கள் மற்றும் காலியான கேன்களில், இந்திய தரநிலை IS 14543-ஐக் குறிப்பிட்டு, BIS தரநிலை முத்திரை (ISI Mark) மற்றும் BIS உரிம எண் CM/L-6700110706 ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், தரநிலை முத்திரையைப் பயன்படுத்துவதற்கான செல்லுபடியாகும் BIS உரிமம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இல்லாதது கண்டறியப்பட்டது. செல்லுபடியாகும் உரிமம் இன்றி BIS தரநிலை முத்திரையைப் பயன்படுத்துவது, BIS சட்டம், 2016-ன் பிரிவு 17(3)-ஐ மீறுவதாகும். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்புகள், கேன்கள் மற்றும் லேபிள்கள் BIS அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட விதிகளின்படி மேல்நடவடிக்கை மேற்கொள்வதற்காக முறைப்படி முத்திரையிட்டு சீலிடப்பட்டன.
BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் அவர்கள் தெரிவித்ததாவது, தற்போதைய ஒழுங்குமுறை நடைமுறைகளின்படி, பேக்கேஜ்டு குடிநீருக்கு BIS சான்றிதழ் பெறுவது தன்னார்வ அடிப்படையிலானது என்றும், அது கட்டாயமில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், தங்களது தயாரிப்புகள், கேன்கள், லேபிள்கள் அல்லது பாட்டில்களில் BIS தரநிலை முத்திரையை (ISI Mark) பயன்படுத்த விரும்பும் எந்தவொரு உற்பத்தியாளரும் அல்லது வணிக நிறுவனமும், சம்பந்தப்பட்ட தயாரிப்பிற்காக இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். BIS சான்றிதழ் தன்னார்வ அடிப்படையிலானது என்பதால், எவரும் BIS அமைவனத்தின் உரிய அங்கீகாரமின்றி ISI முத்திரையைப் பயன்படுத்தவோ அல்லது BIS சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கோரவோ அனுமதி இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய அங்கீகாரமற்ற பயன்பாடு BIS சட்டம், 2016-ன் கீழ் விதிமீறலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ISI முத்திரை பொறிக்கப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், கொள்முதல் செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விநியோக நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வணிக நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் தயாரிப்புகளில், செல்லுபடியாகும் BIS உரிமத்தின் கீழ் மட்டுமே தரநிலை முத்திரை பயன்படுத்தப்படுவதையும், உரிம விவரங்கள் உண்மையானவை மற்றும் சம்பந்தப்பட்ட தயாரிப்பிற்குப் பொருந்தக்கூடியவை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அனைவரும் BIS சட்டம், 2016-ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ள தேவைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
BIS தரநிலை முத்திரையை அங்கீகாரமின்றிப் பயன்படுத்துவது, இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016-ன் பிரிவு 17(3)-ன் கீழ் குற்றமாகும். இச்சட்டத்தின் பிரிவு 29(3)-ன்படி, பிரிவு 17-ன் விதிகளை மீறும் நபருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது முதல் குற்றத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதம், சம்பந்தப்பட்ட பொருட்கள் அல்லது தயாரிப்புகளின் மதிப்பைப் போல் பத்து மடங்கு வரை விதிக்கப்படலாம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், BIS சட்டத்தின் விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

BIS சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தயாரிப்புகளை நம்புவதற்கு முன்பாக, அவற்றில் உள்ள BIS தரநிலை முத்திரை மற்றும் அதற்குரிய உரிம விவரங்களின் உண்மைத்தன்மையை நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த விவரங்களை BIS Care செயலி அல்லது BIS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bis.gov.in மூலம் சரிபார்க்கலாம். BIS தரநிலை முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான புகார்களை BIS Care செயலி மூலமாகவோ அல்லது BIS சென்னை கிளை அலுவலகத்தின் cnbo@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கலாம்.
****
SK/SH