இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 9:07PM by PIB Chennai
செயல்திறன் வாய்ந்த ஆளுகை, குறித்த நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட, தகவல் தொழில்நுட்பத்தால் இயங்கும் பன்முனைத் தளமான 'பிரகதி'யின் 55- வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, சாலை, மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய துறைகளில், மொத்தம் சுமார் ரூ. 78,000 கோடி மதிப்பிலான ஐந்து முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். மேலும், பிரதமரின் சேது திட்டத்தைச் செயல்படுத்துவது உட்பட, தொழிற்பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) சூழலமைப்பையும் அவர் ஆய்வு செய்தார்.
சாலைத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், செலவிடப்படும் தொகையை விட அதன் பலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நிலக்கரித் திட்டத்தைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவதுடன், மறுவாழ்வு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பரவலாக்கப்பட்ட சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களுக்கான புதிய, ஆக்கபூர்வமான மாதிரிகளை ஆராயுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தார். உள்ளூர் வளங்களின் இருப்பையும் தேவையையும் கருத்தில் கொண்டு, மின் நுகர்வு மையங்களுக்கு அருகிலேயே இத்தகைய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஐடிஐ-களை வலுப்படுத்துவதிலும், பிரதமரின் சேது திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் முன்னின்று செயல்படுமாறு மாநில முதலமைச்சர்களையும் தலைமைச் செயலாளர்களையும் திரு மோடி கேட்டுக்கொண்டார். தொழில் நிறுவனங்கள் ஐடிஐ-களுடன் இணைந்து செயல்படுவதற்கும், அவற்றின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பதற்கும், இதுவே சரியான தருணம் என்று அவர் வலியுறுத்தினார். இத்தகைய கூட்டணிகளின் மூலம் இளைஞர்களுக்குச் சிறந்த பயிற்சிகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் வகையில், மாநில அரசுகள், ஐடிஐ-கள், தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் எதிர்கால மனிதவளத் தேவைகளை மதிப்பீடு செய்யுமாறும், தொடர்புடைய துறைகளில் பயிற்சி, பணியமர்த்தலுக்காக ஐடிஐ-களுடன் இணைப்பை வலுப்படுத்திக்கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். நடைமுறைப் பயிற்சி, தொழிற்பயிற்சித் திட்டங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் ஆதரவளிக்குமாறும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொழிற்துறைத் தொகுப்புகள், தனிப்பட்ட துறைகளின் தேவைகளை மையமாகக் கொண்டு திறன் மேம்பாடு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் தற்போதுள்ள தொழில்கள், வரவிருக்கும் முதலீடுகளுக்கு ஏற்ப ஐடிஐ வர்த்தகப் பிரிவுகள், பாடத்திட்டங்கள், பயிற்சித் திறன் ஆகியவை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஐடிஐ கல்வியில் ‘வகுப்பறை–நிறுவனம்–தொழில் வாழ்க்கை’ என்ற அணுகுமுறையைப் பிரதமர் பரிந்துரைத்தார். இது, வகுப்பறை கற்றலைத் தொழில்துறை சார்ந்த நடைமுறை அனுபவத்துடனும், அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு, தொழில்முறை முன்னேற்றத்துடனும் இணைக்கிறது. மாணவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஞானத்தை வழங்குவதற்கும், உண்மையான பணிச்சூழலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்வதற்கான தெளிவான பாதையை உருவாக்குவதற்கும் ஐடிஐ-களும் தொழில்துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341608®=3&lang=1
****
TV/BR/SH