இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 3:23PM by PIB Chennai
கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்தி சூழலை ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கனரக தொழில்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணங்கள், அதனுடைய உதிரி பாகங்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிப்பதையும், இதற்கென பிரத்யேக கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணங்கள் சோதனை வசதியையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தற்சார்பு நிலை அதிகரித்து உலகளாவிய கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணங்கள் சந்தையில் இந்தியாவை முக்கிய அங்கமாக திகழச் செய்ய முடியும்.
உலகில் கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணங்கள் சந்தையில் தற்போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2024 - 25-ம் நிதியாண்டில் அதன் சந்தை மதிப்பு ரூ.97,500 கோடியாகும். உள்கட்டமைப்பு (சாலைகள், துறைமுகங்கள்), வீட்டுவசதித் துறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியால் இத்துறையின் சந்தை மதிப்பு 2029 – 30-ம் நிதியாண்டிற்குள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து சுமார் ரூ.2,28,100 கோடியை அடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம், உள்கட்டமைப்புத் துறையில் விரைவான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ள இத்திட்டம், கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் கிரேன், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப ரீதியான மேம்பட்ட உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் நாட்டிலேயே அதிநவீன பிரத்யேகமாக கட்டுமானம், உள்கட்டமைப்பு உபகரணம் சோதனை வசதியை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
நடப்பு 2026 - 27-ம் நிதியாண்டு முதல் 8 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 2026 – 27 முதல் 2027 – 28 வரை இரண்டு ஆண்டுகள் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான காலமும் அதைத்தொடர்ந்து 2028 – 29 முதல் 2032 – 33 வரை ஐந்து ஆண்டுகள் ஊக்கத்தொகை அளிக்கும் காலமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341171®=3&lang=1&_gl=1
***
SS/IR/LDN/PS