சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் ஜவுளித் துறை திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 3:09PM by PIB Chennai

தமிழ்நாட்டில் ஜவுளி, பட்டு வளர்ப்புத் துறைகளை வலுப்படுத்துதல், தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், ஜவுளி ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2026 நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சென்னையில் கைத்தறித் துறை, மத்திய பட்டு வாரியம், பிரதமரின் ஜவுளிப் பூங்கா ஆகிய துறைகளைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் இன்று (நவம்பர் 24) அமைச்சர் பங்கேற்றார். இதில் தமிழ்நாடு கைத்தறி, கைவினைப்பொருட்கள், துணிநூல், கதர்த்துறை செயலாளர் திருமதி ஆர் லில்லி, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் திரு ஆர் சதீஷ், சிப்காட் மேலாண்மை இயக்குநர் திரு எஸ்.ஏ. ராமன், கைத்தறித் துறை இயக்குநர் திருமதி பி. உமா மகேஸ்வரி மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சக அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விருதுநகரில் அமையவுள்ள பிரதமரின் மித்ரா பூங்காவின் முன்னேற்றம், காஞ்சிபுரத்தில் பட்டுப் பொருட்களின் பன்முகத்தன்மை, நெசவாளர்களின் வருமானத்தை அதிகரித்தல், நவீன இழைகளை ஊக்குவித்தல், காஞ்சிபுரம் பட்டு மாதிரியை மற்ற ஜவுளித் துறைகளிலும் விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

முன்னதாக, நவம்பர் 23 அன்று சென்னையில் 27-வது சர்வதேச பட்டு வளர்ப்பு, பட்டுத் தொழில் மாநாடு, சில்க் மார்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பிறகு, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்காவை அமைச்சர் பார்வையிட்டார். அங்குள்ள கைத்தறி அலகுகளை ஆய்வு செய்த அவர், நெசவாளர்கள், இயக்குநர் குழுவினருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள மத்திய பட்டு வாரியத்தின் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் ஜரிகை பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றினை அமைச்சர் நட்டார்.

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340824) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English