சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

9 மாதங்களில் 1 கோடி ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:44PM by PIB Chennai

இந்தியாவில் 9 மாதங்களுக்குள் 14 வயது சிறுமிகளுக்கு 1 கோடிக்கும் அதிகமான ஹெச்பிவி (HPV) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது நோய்கள் வருவதற்கு முன்பே தடுக்கும் மருத்துவப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடுப்பூசியும் சிறுமிகளை கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரு படி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2026-ல் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 14 வயதுடைய சிறுமிகளுக்கு பெற்றோரின் ஒப்புதலுடன் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக ஒரே ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 87 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய 6 மாநிலங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன. 12 மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இலக்கு எட்டப்பட்டுள்ளது. அசாமில் 95.63 சதவீதம், தெலங்கானாவில் 95.28 சதவீதம், கர்நாடகாவில் 93.16 சதவீதம், உத்தராகண்டில் 90.17 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76.12 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் 29.33 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகாரில் 13.70 லட்சத்துக்கும் அதிகமானோர், குஜராத்தில் 7.75 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனும் இச்சாதனையைப் பாராட்டியுள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, பிரதமரின் தலைமைக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிரிவும் இந்தியாவைப் பாராட்டியுள்ளது.

ஹெச்பிவி வைரசின் சில வகைகள் கருப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. இதைத் தடுப்பதில் இந்தத் தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 80 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி முகாம்கள் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறுகின்றன.  பெற்றோர் யு-வின் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை முன்பதிவு செய்வதுடன், சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம். தகுதியுள்ள அனைத்து சிறுமிகளுக்கும் இந்தத் தடுப்பூசிப் பாதுகாப்பை வழங்க மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340488&reg=3&lang=1

(Release ID : 2340488)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340583) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी