பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாளப் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 4:58PM by PIB Chennai

நேபாள பிரதமர் திரு பாலேந்திர ஷா, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய அவர், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரும் அவரைச் சந்தித்தார்.

இரு நாட்டுப் பிரதமர்களும் இருதரப்பு உறவுகள், பிராந்தியப் பிரச்சனைகள், உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின்போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவி, தொழில்நுட்ப ஆதரவுக்கு பிரதமர் திரு பாலேந்திர ஷா நன்றி தெரிவித்தார்.

நேபாளத்தின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.15,000 கோடி (நேபாள மதிப்பில் ரூ.24,000 கோடி) உதவி வழங்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்தியா – நேபாளம் இடையேயான எதிர்காலக் ஒத்துழைப்புக்கான வழிகாட்டியாக 'வளர்ச்சியடைந்த பாரதம் – வளமான நேபாளம்' என்ற கூட்டு தொலைநோக்குத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரம், போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, நீர்வளம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் சேவைகள், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை இது வலுப்படுத்தும்.

விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், காத்மாண்டு – பைரஹவா – லக்னோ இடையிலான பி345 விமான வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் நடைபெறும்.

நேபாளத்தின் சரக்குப் போக்குவரத்துக்காக குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தைப் பயன்படுத்த புதிய வசதி அறிவிக்கப்பட்டது. தேவையான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தையும் நேபாளம் பயன்படுத்தலாம்.

அயோத்தி – ஜனக்பூர் இடையே சரயு – கமலா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. ராமாயண சுற்றுலா மேம்படுவதுடன், புத்த மதம், சிவசக்தி சுற்றுலாப் பாதைகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் வெளிநாட்டு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-யின் வளாகம் அமைக்கப்படும். கல்வி, வங்கி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல் நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும்.

8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

குஜராத் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் நேபாள காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் இடையே கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கும் நேபாள தேசிய காவல் பயிற்சி அகாடமிக்கும் இடையே ஒப்பந்தம்.

நேபாள அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடர்பாக இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையத்துக்கும் நேபாள நிர்வாகப் பணியாளர் கல்லூரிக்கும் இடையே ஒப்பந்தம்.

ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.

தெற்காசிய செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கும் நேபாள தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம்.

நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

சுகாதாரம், மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.

கால்நடை வளர்ப்பு, மீன்வள மேம்பாட்டுக்கான ஒப்பந்தம்.

நேபாளப் பிரதமர் திரு பாலேந்திர ஷா, இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். நேபாளத்திற்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். பயணத் தேதிகள் தூதரக வழியாக முடிவு செய்யப்படும்.

இந்தியா – நேபாளம் உறவு மேலும் வலுவடைய இந்தப் பயணம் வகை செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340389&reg=3&lang=1

-----

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340519) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada