இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 7:26PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்), சென்னை கிளை சார்பில் தொழில்துறையில் குறைந்த கார்பன் வெளியேற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை (மானக் மந்தன்), 2026 நவம்பர் 20 அன்று சென்னை தரமணியில் நடத்தியது. இந்நிகழ்ச்சி நேரடி மற்றும் இணையவழி முறைகளில் நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான குழு தயாரித்துள்ள “தொழில்துறையின் குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைக்கான வழிகாட்டுதல்கள்” குறித்து கலந்துரையாடுவதற்கும், தொழில்துறை பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்களிடமிருந்து கருத்துகள், பரிந்துரைகளைப் பெறுவதற்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தொழில்துறையில் கார்பன் உமிழ்வைக் குறைத்தல், குறைந்த கார்பன் வெளியேற்ற தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல், ஆற்றல் திறனை மேம்படுத்துதல், நிலையான உற்பத்தி நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் திரு எஸ் டி தயானந்த், நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதிலும் தொழில்துறையின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த அவர், பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து ஆற்றல் நுகர்வு, கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் குறிப்பிட்டார். மேலும், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்துரைத்தார்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் புதுதில்லி தலைமையகத்தின் சுற்றுச்சூழல், சூழலியல் துறையின் துணை இயக்குனர் திரு லலித் யாதவ், “தொழில்துறையின் குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைக்கான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பிலான இணையவழி அமர்வில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பங்கேற்பாளர்கள் பிஐஎஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றதுடன், நிகழ்ச்சி தொடர்பான தங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், ஐஎஸ்ஐ முத்திரை, ஹால்மார்க், சிஆர்எஸ் பதிவுகளின் உண்மைத்தன்மையை பிஐஎஸ் கேர் செயலி, பிஐஎஸ் இணையதளம் மூலம் சரிபார்க்குமாறும் அல்லது கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் சரிபார்க்குமாறும் நுகர்வோர், தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.



***
SS/PD/GS