இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 8:35PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ், பயிற்சி தலைமை இயக்குநரகத்தின் (DGT) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை கிண்டி தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் பயிற்சி ஆண்டிற்கான 5-ஆவது பட்டமளிப்பு விழா 2026 நவம்பர் 21ஆம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழ்நாடு மண்டல திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் வேலைவாய்ப்பு இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் டாக்டர் எம். ஜெயப்பிரகாசன், சென்னை நிறுவனத்தின் முதல்வர் திரு. S.சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஸ்டெல்லாண்டிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் திரு. பாஸ்கரன் கலந்து கொண்டார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்தேர்வில் (AITT), சென்னை தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் கைவினைப் பயிற்றுநர் பயிற்சித் திட்டத்தின் (CITS) அளவையர் (Surveyor) தொழிற்பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
அதேபோன்று, கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் (CTS) ட்ரோன் இயக்குனர் தொழிற்பிரிவில், இந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேசிய அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்தார்.
தேசிய அளவில் சாதனை படைத்த இவ்விரு பயிற்சியாளர்களுக்கும் கேடயங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், 2025-2026 ஆம் பயிற்சி ஆண்டில் நிறுவனத்தின் 13 CITS மற்றும் 3 CTS தொழிற்பிரிவுகளில் முதலிடம் பெற்ற பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 412 மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றனர்.
விழாவில் உரையாற்றிய மண்டல இயக்குநரும் சிறப்பு விருந்தினரும், பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் நோக்கங்கள், நாட்டின் திறன் மேம்பாட்டில் அதன் பங்களிப்பு மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப இளைஞர்கள் தங்களது தொழில்நுட்பத் திறன்களையும் நடைமுறை அறிவையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும், தொழில்துறைக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை குறிப்பிட்டனர்.
இவ்விழாவில் நிறுவன அதிகாரிகள், பயிற்றுநர்கள், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
****
TV/SH