திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லக்னோவில் 5-வது திறன் மேம்பாட்டுப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

இந்தியா உலகின் திறன் மையமாக உருவெடுத்து வருகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 7:09PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 5-வது திறன் மேம்பாட்டுப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (21.11.2026) பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திறன் பயிற்சி முடித்த இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் நேரடியாகப் பங்களிக்கத் தயாராகி இருப்பதாகத் தெரிவித்தார். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) அவர்கள் கற்றுக்கொண்ட திறன்கள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறை, திறன் சார்ந்த தொழில்களுக்கு உரிய மதிப்பைக் குறைத்து, எழுத்தர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாக அவர் தெரிவித்தார். இந்த மனப்பான்மையால் திறமையான கைவினைக் கலைஞர்கள் தங்கள் தொழில்களைத் தொடரத் தயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

2014-ம் ஆண்டுக்குப் பிறகு திறன் மேம்பாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 5,000 புதிய ஐடிஐ நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது எனவும் மாணவிகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா உலகின் திறன் மையமாக உருவெடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு உதவியாளர், இணையப் பாதுகாப்பு, ட்ரோன் தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், தொழில்துறை ரோபோட்டிக்ஸ், குறைக்கடத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய காலத்திற்கேற்ற பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐடிஐ பாடத்திட்டங்களை நவீனப்படுத்தவும், பயிற்றுநர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கவும், தொழில் நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவும் பிரதமரின் பிஎம்-சேது திட்டத்தின் கீழ் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், திறமை உள்ளவர்களின் வேலைவாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது என்றார்.

கடந்த 12 ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் மூலம் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டுதல், குடிநீர்க் குழாய்கள் அமைத்தல், மின்சார இணைப்புகள் வழங்குதல் போன்ற திட்டங்கள் மூலம் மின்சாரப் பணியாளர்கள், தச்சர்கள் உள்ளிட்ட திறமையான தொழிலாளர்களுக்குப் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2027-ம் ஆண்டு உலகத் திறன் போட்டியின் ஆசியப் பிரிவு நிகழ்ச்சி கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார். நாட்டின் இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும், தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், கனவுகளை நனவாக்க முழு முயற்சியுடன் உழைக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340014&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2340056) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी