இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2026 4:49PM by PIB Chennai
நாட்டில் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் பல்வேறு புதிய திட்டங்களை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் காந்திநகரில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சர்கள் பங்கேற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தேசிய வேலைவாய்ப்பு சேவையின் கீழ், என்சிஎஸ் ஒன் (NCS ONE) இணையதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் தொழிலாளர் தேவையை அறிய உதவும் தொழிலாளர் குறியீடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இ-ஷ்ரம் தளத்தில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், ஜெய்ப்பூர், லூதியானா, புவனேஸ்வர், கான்பூர், பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கவுகாத்தி ஆகிய எட்டு நகரங்களில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் மையங்களை காணொலி மூலம் அமைச்சர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 200 மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு இளைஞர்களுக்குத் திறன் மதிப்பீடு, பயிற்சி, தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு உதவி ஆகியவை வழங்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களும் கிடைக்கும்.
நிகழ்ச்சியில் திரு மன்சுக் மாண்டவியா பேசுகையில், தொழிலாளர் நலன் தொடர்பான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவும் இதில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் சட்டங்களைச் செயல்படுத்துதல், வருங்கால வைப்பு நிதி அமைப்பு சீர்திருத்தங்கள், தொழிலாளர் காப்பீட்டு அமைப்பில் சீர்திருத்தங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339938®=3
****
SK/PLM/RJ