மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ் சங்கமம் 5.0-ஐ முன்னிட்டு அஸ்ஸி படித்துறையில் ரங்கோலிப் போட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 7:27PM by PIB Chennai

காசி தமிழ் சங்கமம் 5.0, வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று அஸ்ஸி படித்துறையில் ரங்கோலி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி காசி வித்யாபீடம், பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் இந்திய கலாச்சாரம், மரபுகள், சமூக மாண்புகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு கருப்பொருள்கள், செய்திகளை முன்வைக்கும் வண்ணமயமான ரங்கோலிகளை உருவாக்கினர். இவர்களின் படைப்புகள் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. முன்னதாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விஸ்வநாதர்  கோயிலில் மாலை நேர பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெருவாரியான மக்களை இந்த நிகழ்வுடன் இணைப்பதும், காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமை குறித்த செய்தியை நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொண்டு சேர்ப்பதும் இந்தச் செயல்பாடுகளின் நோக்கம் என்று காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்விற்கான பல்கலைக்கழகத்தின் முதன்மை அதிகாரி பேராசிரியர் அஞ்சல் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

“திருக்குறள் பயில்வோம்” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மொழிபெயர்ப்புகள் வாயிலாகத் திருக்குறளின் போதனைகளை அனைவரிடமும் கொண்டு செல்வதை இந்த ஆண்டு பதிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களும், மக்களும் திருக்குறளில் அடங்கியுள்ள காலத்தால் அழியாத ஞானம், மாண்புகள், போதனைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339668&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339747) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu