இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 7:05PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (21.11.2026) சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழாவில் உரையாற்றினார்.
அப்போது, பெருந்தலைவர் காமராஜருக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார். காமராஜரின் தன்னலமற்ற தலைமைப் பண்பு, எளிமையான வாழ்க்கை, பொதுமக்களின் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை அவர் நினைவுகூர்ந்தார். பெருந்தலைவர் காமராஜரின் புகழ் தமிழக மண்ணில் நிலைத்திருக்கும் வரை, தமிழகத்தில் உள்ள தேசிய உணர்வை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி ஆகிய துறைகளில் காமராஜர் செய்த சாதனைகள் ஈடு இணையற்றவை என்று அவர் குறிப்பிட்டார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் பல முக்கிய அணைகள் கட்டப்பட்டதை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், கல்வி, மனித வளம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்வதற்கு காமராஜர் அமைத்த அடித்தளமே முக்கியக் காரணமாக இருந்தது என்றார்.
தேர்தல் வெற்றியையோ, சொந்த நலனையோ ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துக்கும் மேலாகப் பொதுமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த தலைவராகக் காமராஜர் விளங்கினார் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வியுடன் சத்தான உணவும் கிடைக்க வேண்டும் என்பதில் காமராஜர் கொண்டிருந்த அக்கறையை இது எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

கல்விப் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தைப் பாராட்டிய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தப் பள்ளி 1985-ம் ஆண்டு வெறும் 85 மாணவர்கள், 7 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தற்போது சுமார் 3,500 மாணவர்கள், கிட்டத்தட்ட 200 ஆசிரியர்கள், பணியாளர்களுடன் இந்தப் பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் கனவுகள் இந்தப் பள்ளியின் மூலம் நனவாகியிருப்பதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கல்வி என்பது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன் நின்றுவிடக் கூடாது என்று வலியுறுத்திய அவர், மாணவர்களிடம் வலுவான நற்பண்புகள், இரக்க குணம், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும் இடமாகப் பள்ளிகள் திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், மாணவர்கள் அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சித் திறன், புதிய சிந்தனைகளை உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார்.
ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், புதுமையான சிந்தனைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்குத் தங்களை மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, அனுபவத்தின் மூலம் கற்றல், தொழிற்கல்வித் திறன்கள், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு இந்தக் கொள்கை முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மனப்பாடம் செய்து படிக்கும் முறையைக் கடந்து, பாடங்களின் அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொண்டு படிப்பதுடன், படைப்பாற்றல் சிந்தனையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியம், மனிதநேய விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பது நாட்டின் வலிமையுடன் நெருங்கிய தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார். தமிழ் கலாசாரம், தமிழ் மக்கள், தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமானால், பாரதம் வலிமையான நாடாகத் தொடர்ந்து திகழ வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கைக் குறிப்பிட்ட அவர், அறிவு, புதிய கண்டுபிடிப்புகள், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும் என்றும், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறுக்கு வழிகளைத் தேடாமல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் தங்களது இலக்குகளை அடைய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, நெல்லை நாடார் பொறியியல் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கம், ஆண்கள் விடுதி ஆகியவற்றைக் குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்தார்.
மேலும், நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர், காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339654®=3&lang=1
(Release ID: 2339654)
****
TV/PLM/SH