சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.172 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மருத்துவக் கட்டமைப்புகள், புதிய திட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்; 15-வது பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்றார்

நாட்டில் 2029-ம் ஆண்டுக்குள் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மேலும் 75,000 இடங்கள் உருவாக்கப்படும் – திரு ஜெ.பி. நட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 4:18PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, இன்று (21.11.2026) புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) மருத்துவச் சேவை, ஆராய்ச்சி, மாணவர் நலன் தொடர்பான 7 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஜிப்மரின் 15-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், படிப்பை முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா உரையையும் அவர் நிகழ்த்தினார்.

ஜிப்மரில் மொத்தம் ரூ.172.27 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 7 புதிய வசதிகள், தரமான மருத்துவச் சேவைகள் மக்களைச் சென்றடைவதை அதிகரிப்பதோடு, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகள் நலன் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக ஜிப்மர் தொடர்ந்து செயல்படுவதற்கும் முக்கியப் பங்காற்றும்.

 

புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்ட 7 திட்டங்களின் விவரங்கள்:

1. ஆராய்ச்சி, புத்தாக்க மேம்பாட்டு மையம் (ரூ.30.28 கோடி)

2. தன்வந்திரி இல்ல மாணவர் விடுதி (ரூ.42.26 கோடி)

3. 64 ஸ்லைஸ் சிடி ஸ்கேன் கருவி – ஏனாம் பல்நோக்கு மருத்துவ ஆலோசனைப் பிரிவு (ரூ.4.73 கோடி)

4. மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நவீனக் கருவி (ரூ.26 கோடி)

5. கதிர்வீச்சு சிகிச்சை தொடர்பான நவீன 4டி சிடி சிமுலேட்டர் (ரூ.9 கோடி)

6. நவீன இதய வடிகுழாய் சிகிச்சைக் கூட வளாகம் (சுமார் ரூ.60 கோடி)

7. மூன்று அம்ரித் மருந்தகங்கள்

புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு நட்டா, வளர்ச்சியடைந்த இந்தியா என்பது ஆரோக்கியமான இந்தியாவாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், மக்களின் ஆரோக்கியம், எதிர்காலம் ஆகியவற்றுக்கான முதலீடுகள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள் நவீன உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி, புத்தாக்கம், கல்விக் கட்டமைப்பு, நவீன நோய் கண்டறிதல் வசதிகள், துல்லியமான புற்றுநோய் சிகிச்சை, இதய மருத்துவச் சேவை, குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பது ஆகிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் திரு நட்டா, புதுச்சேரி சேதராப்பேட்டையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம், விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் ஆகியவற்றை அமைக்க ஜிப்மர் திட்டமிட்டிருப்பதை வரவேற்றார்.

இந்தப் புதிய மையங்கள் மூலம் இப்பகுதியில் மிக உயர்தர சிறப்பு மருத்துவச் சேவைகள் மக்களுக்குக் கிடைப்பது மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பதக்கங்களையும் வழங்கினார். வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கல்வி கற்கும் நிலையிலிருந்து தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் நிலைக்கு மாணவர்கள் முன்னேறும் முக்கியமான தருணமாக இந்த விழா அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, மருத்துவச் சேவைகள் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாகவும் ஜிப்மர் நீண்டகாலமாகச் சிறந்து விளங்கி வருவதை அவர் சுட்டிக் காட்டினார் 2025-26-ம் ஆண்டில் மட்டும் ஜிப்மரில் 46,815-க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மருத்துவக் கல்வியில், இந்தியா மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருவதாக அமைச்சர் திரு நட்டா கூறினார்.

நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 23 ஆக உயர்ந்துள்ளதாகவும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-லிருந்து 863 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், எம்பிபிஎஸ். மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 51,000-லிருந்து 1.43 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2029-ம் ஆண்டுக்குள் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மேலும் 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில், மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதிலும், இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு இடையே சரியான சமநிலையைப் பேணுவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

 பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது தொழில்முறைப் பொறுப்புகளையும், சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் திரு நட்டா வலியுறுத்தினார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பேசுகையில், புதுச்சேரியின் பெருமையாகவும், மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் ஜிப்மர் திகழ்வதாகக் குறிப்பிட்டார். புதுச்சேரியிலும், அண்டை மாநிலங்களிலும் பொது சுகாதாரம், சமூக நல மருத்துவச் சேவைகள் ஆகியவற்றில் ஜிப்மர் ஆற்றி வரும் பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஜிப்மர் முக்கியப் பங்காற்றி வருவதாகவும், குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதில் ஜிப்மரின் பங்களிப்பையும் திரு கைலாஷ்நாதன் பாராட்டினார்.

ஜிப்மரின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 816 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் மருத்துவ முனைவர் பட்டம், மருத்துவம், பல் மருத்துவம், உயர் சிறப்புப் பிரிவு படிப்புகள் ஆகியவற்றில் 592 பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், செவிலியர் படிப்பு, பொது சுகாதாரம், துணை மருத்துவப் படிப்புகள் ஆகிய பிரிவுகளில் 224 பட்டங்கள் வழங்கப்பட்டன.

தங்களது பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பட்டமளிப்பு விழா, படிப்பை நிறைவு செய்த மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.

ஜிப்மர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சித்ரா சர்க்கார் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்தார். ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, நிறுவனத்தின் சாதனைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் மருத்துவக் கல்வி, நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகள், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஜிப்மர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339531&reg=3&lang=1

(Release ID: 2339531)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339613) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English