இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 1:25PM by PIB Chennai

சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர்-கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி, CSIR-SERC), 2026 நவம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை, ‘ஒரு நாள் விஞ்ஞானி’ என்ற ஐந்து நாள் நிகழ்ச்சியை நடத்தியது. நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சிஎஸ்ஐஆர்-ஜிக்யாசா 3.0 திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவான இத்திட்டம், மாணவர்களுக்கு அறிவியலின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில் அவர் வலியுறுத்திய கருத்தின் அடிப்படையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுடன் தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி தொடங்கி வைத்தார். விஞ்ஞானி டாக்டர் எஸ். மகேஸ்வரன், நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், புதிய கண்டுபிடிப்புகளின் பங்கை எடுத்துரைத்தார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பொறியியலில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

மாணவர்களுக்கு அறிவியல் விரிவுரைகள், செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கட்டமைப்புப் பொறியியல், மேம்பட்ட பொருட்கள், பேரிடர் தடுப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆய்வகங்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
மேலும், சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் பிற ஆய்வகங்களான சிஎஸ்ஐஆர்-சிஇஇஆர்ஐ, சிஎஸ்ஐஆர்-என்இஇஆர்ஐ ஆகியவற்றின் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

****
TV/PLM/SH