இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 1:15PM by PIB Chennai

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ) நவம்பர் 20-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் திருமதி என். கலைச்செல்வி, நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தொடங்கி வைத்து, அவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில், தொழில்நுட்பத் துணிநூல் தயாரிப்புக்கான முன்னோடி உற்பத்தி அமைப்பு (Technical Textile Pilot Plant), 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட உயர் துல்லிய அணுக்காந்த அதிர்வு நிறமாலை கருவி (NMR Spectrometer) ஆகியவை முக்கியமானவை. ஆறு வகையான இயந்திரங்களைக் கொண்ட முன்னோடி உற்பத்தி அமைப்பானது, தோல், காலணி, துணிநூல் உள்ளிட்ட துறைகளுக்குப் புதிய பொருட்களை உருவாக்குதல், தயாரிப்பு மாதிரிகளை வடிவமைத்தல், உற்பத்தி முறைகளைச் சோதித்தல் ஆகியவற்றுக்கு உதவும். இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும்.

புதிய என்எம்ஆர் கருவி, நிலைத்தன்மை, காலணி, ஆடை, உயிரிப் பொருட்கள், மருத்துவத் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிகளுக்கு உதவும். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், கூட்டு ஆராய்ச்சிகள், உயர்தர ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை உருவாக வழிவகுக்கும்.
2070-ம் ஆண்டுக்குள் நிகரப் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற இலக்கை அடையும் முயற்சிக்கு ஆதரவாக, தோல் தொழில்துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் கணக்கிடும் சிஎல்எ மேட் (CLI-Mate) என்ற உள்நாட்டுத் தொழில்நுட்ப டிஜிட்டல் தளத்தை நான்கு நிறுவனங்களுக்கு சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ வழங்கியது. இந்தத் தளம், தொழிற்சாலைகளின் கார்பன் வெளியேற்றத்தைக் கணக்கிட்டு, அதிக மாசு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அதைக் குறைப்பதற்கான வழிகளை உருவாக்க உதவும்.

நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ இயக்குநர் டாக்டர் பி. தணிகைவேலன், முன்னாள் இயக்குநர்கள் டாக்டர் பி. சந்திரசேகரன், டாக்டர் கே.ஜே. ஸ்ரீராம், சிஎஸ்ஐஆர்-ஏஎம்பிஆர்ஐ இயக்குநர் டாக்டர் தல்லாடா பாஸ்கர் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தொழில்துறையினர் பங்கேற்றனர். விஞ்ஞானி டாக்டர் எஸ். கணேஷ் நன்றி கூறினார்.
****
TV/PLM/SH