இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 6:21PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் போஷ் (POSH) சட்டம் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வுப் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. 2026 நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிஐஎஸ் தென் மண்டல அலுவலகம், தென் மண்டல ஆய்வகம், சென்னை கிளை அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிஐஎஸ் தென் மண்டல துணைத் தலைமை இயக்குநர் எம்.ஏ.ஜே. வினோத், பாதுகாப்பான, மரியாதையான பணிச்சூழலை உருவாக்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என வலியுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ஆர். பிரியதர்ஷினி, சட்ட ஆலோசகர் ஆர். ஹர்ஷவர்தன் ஆகியோர் விளக்கங்களை அளித்தனர்.
2013-ம் ஆண்டு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்து இதில் விளக்கப்பட்டது. புகார் அளித்தல், விசாரணை நடைமுறைகள், புகார்களைப் பெறும் குழுவின் பொறுப்புகள், ரகசியம் காத்தல், பாலின சமத்துவம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

****
TV/PLM/SH