பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:24PM by PIB Chennai
இந்தியா - எகிப்து நிறுவன ரீதியான ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் தங்களுடைய நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். டிஜிட்டல் நிர்வாகம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் துறையில் இந்தியாவின் அனுபவம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லியில் உள்ள தேசிய நல் ஆளுகை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, எகிப்து துணை ஆளுநர்களுக்கான ஸ்மார்ட் நிர்வாகம் குறித்த முதலாவது சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்ற, எகிப்தின் 25 துணை ஆளுநர்களைக் கொண்ட குழுவினருடன் அமைச்சர் உரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் நிர்வாக அமைப்பு, உலகின் மிகப்பெரிய மிகவும் வலிமையான குடிமைப் பணி கட்டமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றும், இது பெரும்பாலும் நிர்வாகத்தின் எஃகுச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தியாவின் பன்முகத்தன்மை, பல்வேறு பிராந்தியங்களின் வெவ்வேறு நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா பலதரப்பட்ட நிர்வாக நடைமுறைகளையும் நிறுவன அனுபவங்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றை மற்ற நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார். இத்தகைய திட்டங்கள் பரஸ்பர கற்றலை ஊக்குவிக்க வேண்டும் என்றும், எதிர்கால பயிற்சிகள், பயிற்சித் தொகுதிகள் ஆகியவை பங்கேற்கும் நாடுகளின் முன்னுரிமைகள், தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338574®=3&lang=1&_gl=1
****
TV/IR/PS/SH